வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (27/06/2018)

கடைசி தொடர்பு:13:50 (27/06/2018)

கோலாகலமாக நடந்த நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்!

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலின் ஆனித் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தார்கள்.

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலின் ஆனித் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

நெல்லையப்பர் தேரோட்டம்

தென் தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சைவத் தலங்களில் ஒன்றான நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலின் ஆனித் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அபிஷேக ஆராதனை, காலையிலும், இரவிலும் சுவாமி, அம்பாள் சப்பர பவனி என சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன், கோயிலில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

ஆனித் திருவிழாவின் 9-வது நாளான இன்று காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. அதனையொட்டிசுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் அலங்காரங்களுடன் தயார் நிலையில் இருந்தன. சிறப்பு அலங்காரத்துடன் இருந்த நெல்லையப்பர் தேரை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், எம்.பி-க்களான கே.ஆர்.பி.பிரபாகரன், முத்துக்கருப்பன், நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் மகேந்திரகுமார் ரத்தோர், கோட்டாட்சியர் மைதிலி, முன்னாள் எம்.பி-யான ராமசுப்பு, முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தேரை இழுத்தார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து வர, நான்கு ரதவீதிகளிலும் சூழ்ந்திருந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பக்திக் கோஷங்கள் முழங்க சுவாமியை வழிபட்டார்கள். 

பக்தர்கள் கூட்டத்தில் தேர்

தேரோட்­டத்தை முன்­னிட்­டு இன்று நெல்லை மாவட்­டத்­துக்கு உள்ளூர் விடு­முறை அளிக்­கப்­பட்­டுள்­ள­து. அதனால் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக ஆர்வத்துடனும் பக்தியுடனும் பக்தர்கள் கலந்துகொண்டு, தேரோட்டத்தைக் கண்டுகளித்தனர். ஆனித் தேரோட்ட வைபவத்தின் நிறைவுநாளான, நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லையப்பர் தேர் மாலையில் நிலைக்கு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேரோட்டத்தையொட்டி ஏராளமான வியாபாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே சுவாமி சந்நிதி ரோடு, ரதவீதிகள் மற்றும் கோயிலுக்குச் செல்லும் சாலைகளில் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர். வெளித் தெப்பக்குளம் அருகில் குழந்தைகளுக்கான ராட்டினங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக தேரோட்டத்தையொட்டி தமிழக அரசால் நடத்தப்படும் சுற்றுலாப் பொருட்காட்சியும் நடைபெற்று வருவதால் வெளியூர்களில் இருந்து தேரோட்டத்தைக் காண வந்த பக்தர்கள் பொருட்காட்சிக்குச் சென்று மகிழ்கிறார்கள்.