`ஏமாற்றினார்.. கொன்றுவிட்டோம்...' - 12 நாள்கள் மர்மத்தை விலக்கிய நண்பர்கள்

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கலியமூர்த்தியைக் காரில் கடத்தி கொலை செய்த  நண்பர்கள் , காஞ்சிபுரம் மாவட்டம், ஒதியூர் பகுதியில் சடலத்தைப் புதைத்துள்ளனர்.

நண்பர்கள் கொன்ற  கலியமூர்த்தி

 சென்னை, திருவான்மியூர், கங்கையம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். இவரின் மனைவி ஹேமலதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கலியமூர்த்தியைச் சந்திக்க தினமும் நண்பர்கள் வீட்டுக்கு வருவதுண்டு. மேலும், தொழில் தொடர்பாகவும் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள். இது, குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், கலியமூர்த்தி, குடும்பத்தைப் பிரிந்து திருவான்மியூரில் உள்ள தி.மு.க பிரமுகர் ஒருவரின் அலுவலகத்திலேயே தங்கியிருந்தார். தி.மு.க. ஆதரவாளராகவும் இருந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த 16-ம் தேதியிலிருந்து கலியமூர்த்தியைக் காணவில்லை. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் ஹேமலதா, திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீலன் விசாரணை நடத்தினார். இந்தச் சமயத்தில் கலியமூர்த்தியின் நண்பர் ஒருவர், போலீஸாரிடம் முக்கியத் தகவல் ஒன்றைத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீஸாருக்கு இரண்டு பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களைத் தொடர்ந்து போலீஸார் கண்காணித்தனர். அப்போது, அவர்களைத்தான் கலியமூர்த்தி கடைசியாக சந்தித்தத் தகவல் கிடைத்தது. இதனால், அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கிழக்குக் கடற்கரைச் சாலையில் கலியமூர்த்தி ஒரு இடத்தை விற்றுள்ளார். அப்போது கலியமூர்த்திக்கும் சிலருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் கிடைத்தும் அவர்கள் யார் என்று விசாரித்தோம். அவர்களுடன்தான் கலியமூர்த்தி, காரில் சென்ற விவரம் கிடைத்தது. கலியமூர்த்தியை காரில் அழைத்துச் சென்றவர்களிடம் விசாரித்தோம். அப்போது, அவர்கள் கலியமூர்த்தி எங்களை ஏமாற்றிவிட்டார். இதனால் அவரின் கதையை முடித்துவிட்டோம் என்று கூறினர். 

இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினோம். கலியமூர்த்தியை கொன்றவர்களிடம் விசாரணை நடத்தினோம். சம்பவத்தன்று கலியமூர்த்தியிடம் அவரின் நண்பர்கள் பணம் கேட்டுள்ளனர். பணத்தைக்கொடுக்காததால் அவரைக் காரில் கடத்திச் சென்று உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். அதில் அவர் இறந்துவிட்டார். தொடர்ந்து அவரின் சடலத்தை காஞ்சிபுரம் மாவட்டம் ஒதியூர் பகுதியில் புதைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். கலியமூர்த்தியின் நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் மூன்று பேரை பிடித்துள்ளோம். தற்போது கலியமூர்த்தியின் சடலத்தைத் தோண்டியெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றனர். 

கலியமூர்த்தியைக் கடத்தியவர்கள் அவரின் நண்பர்கள்தான். எல்லோரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு இடத்தை விற்றதில் 8,00,000 ரூபாய் லாபமாக கிடைத்துள்ளது. அந்தப்பணம் கலியமூர்த்தியிடம் இருந்துள்ளது. அதைத்தர அவர் மறுத்துவிட்டதால் அவர் கொல்லப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளின் போனை போலீஸார் ஆய்வு செய்தபோதுதான் கலியமூர்த்தியைக் கொலை செய்தது தொடர்பான சில தகவல்கள், போன் உரையாடல்கள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. அதன்பிறகே போலீஸார், முருகவேல், செந்தில், மணிகண்டன் ஆகியோரிடம்  விசாரித்துவருகின்றனர்.  

அவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை  எடுக்க உள்ளனர். கலியமூர்த்தியின் உடலைப் புதைத்த இடத்தை அடையாளம் காட்ட உதவி கமிஷனர் சுப்பராயலு, இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீலன் ஆகியோர் மூன்று பேரையும் ஒதியூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கலியமூர்த்தியின் சடலத்தைத் தோண்டியெடுக்க வருவாய்த் துறையினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டு சில நாள்களாவதால் கலியமூர்த்தியின் சடலம் அழுகியிருக்க வாய்ப்புள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

16-ம் தேதி மாயமான கலியமூர்த்தி, 27-ம் தேதி கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததுள்ளது. 12 நாள்களாக அவரைத் தேடிய போலீஸாருக்கு கலியமூர்த்தி கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. இது, அவரின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!