வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (27/06/2018)

கடைசி தொடர்பு:14:32 (27/06/2018)

'கம்பெனி பார்ட்னர், டெண்டர் கோல்மால்!' - விஜயபாஸ்கர் துறை அதிகாரி மீது குவியும் புகார்

' ரேட் காண்ட்ராக்ட் அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு என்னென்ன கருவிகள் வாங்கப்பட்டன, எந்த கம்பெனிக்குத் தொடர்ந்து பணிகள் வழங்கப்பட்டன என்பதை ஆய்வு செய்தாலே மொத்த நெட்வொர்க்கும் வெளியில் வரும்' என்கின்றனர் அரசு ஒப்பந்ததாரர்கள்.

'கம்பெனி பார்ட்னர், டெண்டர் கோல்மால்!' - விஜயபாஸ்கர் துறை அதிகாரி மீது குவியும் புகார்

அமைச்சர் விஜயபாஸ்கர்

ரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சேர வேண்டிய உயிர்காக்கும் கருவிகளுக்கான டெண்டரை, ஆதாயத்துக்காக அதிகாரிகள் தாமதம் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ' தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில் இருக்கும் அதிகாரிகள்தான் தாமதத்துக்குக் காரணம். ஒவ்வொரு டெண்டரையும் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கின்றனர்' எனக் கொதிக்கின்றனர் அரசு ஒப்பந்ததாரர்கள். 

தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின்கீழ் 37 மருத்துவமனைகளும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின்கீழ் 303 மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன. இவை தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் 3 கோடி பேர் சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர். தனியார் மருத்துவமனைகளில்கூட செய்ய முடியாத அளவுக்கு அதிதொழில்நுட்பம் வாய்ந்த அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுகின்றன. இதயநோய் அறுவை சிகிச்சையில் கோவை அரசு மருத்துவமனையின் சாதனைகள் அளப்பறியது. இந்தச் சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும், ' அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்குவதில், மருத்துவப் பணிகள் சேவைக்கழகம் பாரபட்சத்தைக் காட்டுகிறது' என ஆதங்கப்படுகின்றனர் அரசு ஒப்பந்ததாரர்கள். `` அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் குறித்து, மருத்துவக் கல்வி இயக்ககத்தில் இருந்து மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்துக்குத் தகவல் அளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு கருவிகள் வாங்கப்படுகின்றன. இதில், தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்குச் சாதகமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். இவர்களது செயல்பாடுகளால் நூற்றுக்கணக்கான டெண்டர்கள் நிலுவையில் உள்ளன"  எனக் கவலையோடு விவரித்த அரசு ஒப்பந்ததாரர் ஒருவர், 

`` மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மயக்க மருந்து அளிக்கும்போது பயன்படுத்தப்படும் பி.ஐ.எஸ் மானிட்டர் கருவிகள் தேவைப்பட்டுள்ளன. இதற்கான டெண்டரை கடந்த 1.8.17 அன்று வெளியிட்டனர். ஓராண்டு முடிந்தும் இன்னும் டெண்டர் முடிவு செய்யப்படவில்லை. இதுவரையில் 21 முறை இந்த டெண்டர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் அறிவிக்கப்பட்ட பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Pulse oximeter) என்ற கருவிக்கான டெண்டரை தற்போது வரையில் 24 முறை தள்ளி வைத்துள்ளனர். இந்த டெண்டர் மீது வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி முடிவு செய்ய உள்ளனர். இவை ஏன் தள்ளிவைக்கப்படுகிறது என்பதற்குத் தெளிவான காரணமும் சொல்லப்படவில்லை. இதுதவிர, 20.4.18 அன்று வெளியிடப்பட்ட மெடிக்கல் ஆக்ஸிஜன் என்ற உயிர்காக்கும் கருவிக்கான டெண்டரையும் இதுவரையில் 7 முறை தள்ளிவைத்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு ரேட் காண்ட்ராக்ட் அடிப்படையில் வாங்க வேண்டிய உபகரணம் இது.

ஆனந்தன்மேலும். 11.9.17 அன்று அறிவிக்கப்பட்ட நேசல் எண்டோஸ்கோப் கருவிக்கான டெண்டரை 20 முறை தள்ளி வைத்துவிட்டனர். அதேபோல், 96 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான பிஸியோதெரபி கருவிகளுக்கான டெண்டரை (எண் 128) கடந்த 22.5.17 அன்று முதல்முறையாக வெளியிட்டனர். இந்த டெண்டர் இதுவரையில் 29 முறை தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இன்றுவரையில் இந்த டெண்டரை அதிகாரிகள் இறுதி செய்யவில்லை. இதேபோல், இன்னொரு பிஸியோதெரபி டெண்டரையும் ஒதுக்கிவைத்துவிட்டனர். இதற்குக் காரணம், மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் கன்சல்டன்ட் ஆக இருக்கும் ஆனந்தன் என்ற அதிகாரிதான் காரணம். மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே இங்கு பணியில் இருக்கிறார். துணை மேலாளராக இருந்து பொது மேலாளராகப் பதவி உயர்வு பெற்றவர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ' இவரைவிட்டால் சரியான நபர் கிடைக்க மாட்டார்' எனக் கருதிய சுகாதாரத்துறை அமைச்சகம், 'கன்சல்டன்ட்' என்ற புதிய பதவியை உருவாக்கி, அவரை மீண்டும் கொண்டு வந்தது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவு இருப்பதால், ஆனந்தன் வைப்பதுதான் சட்டமாக இருக்கிறது. இவர்களுக்கு வேண்டப்பட்ட கம்பெனிகளுக்கு மட்டுமே ஆர்டர்கள் வழங்கப்படுகின்றன" எனக் கொதித்தவர், 

`` மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில் குறைந்தபட்சம் 200 டெண்டர்களையாவது நிலுவையில் வைப்பதுதான் இவருடைய ஸ்டைல். இதுவரையில் எந்த டெண்டரும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்ததில்லை. இவருடைய தனிப்பட்ட செயல்பாடுகளால், அறுவை சிகிச்சைக் கருவிகள், பரிசோதனைக் கருவிகள், உயிர் காக்கும் கருவிகள் போன்றவை சரியான முறையில் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சேரவில்லை. பணிக்காலம் முடிந்த பிறகும் இவருக்கு இரண்டு ஆண்டுகள் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டதன் மர்மம்தான் தெரியவில்லை. டெண்டரில் இவர் செய்யும் தவறுகளைக்கூட துறைரீதியான தவறாக மாற்றிவிடுகிறார். உபகரணங்களை பரிசோதிக்கும் மதிப்பீட்டுக் கமிட்டி வரும்போது, இவருக்குத் தேவைப்படும் கம்பெனிகளுக்கு மட்டுமே அப்ரூவல் கொடுக்க வைக்கிறார். சில ஒப்பந்ததாரர்களை வெளிப்படையாக மிரட்டும் வேலைகளையும் செய்கிறார். கடந்த ஆறு மாதத்தில் அப்ரூவல் ஆன 50 டெண்டர்களும், ஆனந்தன் மனது வைத்ததுதான். இதே துறையில்  மீண்டும் பணிநீட்டிப்பு பெறுவதற்கான வேலைகளில் ஆனந்தன் ஈடுபட்டு வருகிறார். 

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம்

இதில் கொடுமையான விஷயம், மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் சில அதிகாரிகள், உபகரணங்கள் தயாரிக்கும் கம்பெனிகளில் பங்குதாரர்களாக மாறிவிடுகின்றனர். புதிய நிறுவனங்களை வாங்குவதற்கும் அவர்கள் பேரம் பேசுகின்றனர். இந்த நிறுவனங்களுக்கே அரசின் ஒப்பந்தப் பணிகளும் சென்று சேருகின்றன. இவர்களது செயல்பாடுகளைப் பார்த்து உயர் அதிகாரிகளே மிரண்டு போய் உள்ளனர். தவிர, அரசு மருத்துவமனைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரேட் காண்ட்ராக்ட் என்ற புதிய சிஸ்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். உபகரணங்களின் விலையை இறுதி செய்து கொடுத்துவிட்டால், அந்த விலையில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைகளே பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். ரேட் காண்ட்ராக்ட் அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளில் என்னென்ன கருவிகள் வாங்கப்பட்டன, எந்த கம்பெனிக்குத் தொடர்ந்து பணிகள் வழங்கப்பட்டன என்பதை ஆய்வு செய்தாலே மொத்த நெட்வொர்க்கும் வெளியில் வரும். கடந்த சில வாரங்களில் சென்னையைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு மட்டும் பத்து கோடி ரூபாய் அளவுக்கு டெண்டரை ஒதுக்கியுள்ளனர். இதுகுறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைப் பெறும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் சட்டரீதியாகவும் போராட இருக்கிறோம்" என்றார் விரிவாக. 

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் கன்சல்டன்ட் ஆக இருக்கும் ஆனந்தனிடம் பேசினோம். `` மருத்துவமனைகளின் தேவைகள் குறித்து துறையில் இருந்து வரும் குறிப்புகளை வைத்து, டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. நாங்கள் ஓர் ஏஜென்சிதான். எந்தவித மாற்றத்தையும் நாங்கள் செய்ய மாட்டோம். இதில் ஏதாவது சந்தேகத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கேட்டால், அவர்களுக்கு தெளிவுபடுத்துவதான் எங்கள் பணி. அதற்கு அந்தக் கம்பெனிகள் சரியான பதில் கொடுக்கும் வரையில் அந்த டெண்டர் லைவ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக நீட்டிப்பு செய்கிறோம். டெண்டரை நீட்டிப்பு செய்வதில் எந்தப் பின்னணியும் கிடையாது. மதிப்பீட்டுக் கமிட்டியும், டெண்டர் தொடர்பான சந்தேகங்களையோ டெமோவையோ எங்களிடம் கேட்பார்கள். இதனால் இறுதி முடிவு எடுப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.

டெண்டர் விதிமுறைகள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பது மட்டும்தான் எங்கள் வேலை. அவர்களுடைய தேவைகள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்கும் வரையில் காத்திருக்கத்தான் வேண்டும். தாமதம் என்பது வேண்டும் என்றே நடப்பது கிடையாது. எந்த ஒரு டெண்டரையும் அவசரமாக முடித்துவிட முடியாது. எந்த அரசு மருத்துவமனைக்கு உபகரணம் தேவையோ, அதுகுறித்து ஓய்வு நேரத்தில்தான் மருத்துவர்கள் தெரிவிப்பார்கள். அவர்களிடம் வற்புறுத்த முடியாது. ரேட் காண்ட்ராக்ட் போடுவதால் எந்தக் குளறுபடிகளும் இல்லை. இந்த விலையின் அடிப்படையில் தேவைப்படும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். என்னை குறிவைத்து ஏன் விமர்சிக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் பேச விருப்பமில்லை. எங்களுக்கு யார் மீதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. 48 மணி நேரத்தில் யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டும் என விதி உள்ளது. தாமதத்துக்குத் தனிப்பட்ட காரணங்கள் எதுவும் கிடையாது. யாருக்கு ஆதரவாகவும் நாங்கள் செயல்படுவது கிடையாது" என்றார் நிதானமாக.