`மானம்தான் பெருசு’ - போலீஸ் தாக்கிய அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் போலீஸார் தாக்கியதால், அவமானம் தாங்க முடியாமல் விவசாயி ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களையும் பொதுமக்களையும் வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. 

தற்கொலை செய்த விவசாயிநெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள பண்டாரகுளம் குமார புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவர், நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மெயின்ரோட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த வள்ளியூர் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் சக்திவேலை மறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர் போலீஸாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸார் நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அவர் மது அருந்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.  

போலீஸார் தாக்கியதில் அவர் கால் உடைந்துள்ளது. அத்துடன் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருக்கிறது. பொதுமக்கள் முன்னிலையில் தனக்கு நடந்த இந்த அவமானத்தால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான சக்திவேல், தனது தோட்டத்தில் பயிர்களுக்கு அடிப்பதற்காக ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தைப் போலீஸார் கண்முன்பாகவே குடித்துவிட்டு சுருண்டு விழுந்தார். 

இதை எதிர்பார்க்காத போலீஸார் சக்திவேலை வள்ளியூர் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லாததால் முதலுதவி சிகிக்சை மட்டும் அளித்தார்கள். பூச்சி மருந்து குடித்த சக்திவேல் தன் மகனுக்கு போன் செய்து நடந்த சம்பவங்களைத் தெரியப்படுத்தியிருக்கிறார். அதனால் அவர் காவல்நிலையத்துக்குச் சென்று கேட்டபோது உரிய பதில் சொல்லவில்லை. அதனால் சந்தேகத்தின் அடிப்படையில் அரசு மருத்துவமனைக்குப் போயிருக்கிறார். 

அங்கு முதல் உதவி சிகிச்சை மட்டும் கொடுக்கப்பட்ட நிலையில் சக்திவேல் இருந்ததால், அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால், செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் சக்திவேலின் உறவினர்கள், போலீஸார் மீது ஆத்திரம் அடைந்துள்ளனர். பூச்சி மருந்து குடித்த தகவலைக்கூட உரிய நேரத்தில் போலீஸார் தங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 

போராடும் உறவினர்கள்

சக்திவேலைத் தாக்கி அவமானப்படுத்திய போலீஸார்மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வள்ளியூர்-சித்தூர் ரோட்டில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் உதயகுமார், ராதாபுரம் தாசில்தார் புகாரி, வள்ளியூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கனகராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

சக்திவேல் மரணம் குறித்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் வள்ளியூர் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!