`என்னை மட்டும் அல்ல, என் நிதியையும் புறக்கணிக்கிறார்கள்!’ - எதிர்க்கட்சி எம்.எல்.ஏ புலம்பல்

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, அதிகாரிகளிடமும் ஆட்சியாளர்களிடமும் நடையாய் நடந்து, மனு மேல் மனு கொடுத்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்குத் தேவையான நிதி இல்லை என்ற பதிலைத்தான் திரும்பத் திரும்ப அரசு தரப்பில் சொல்வார்கள். இந்நிலையில்தான் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா ஆதங்கத்தோடு வெளிப்படுத்தியுள்ள ஒரு தகவல், ‘இப்படியும் நடக்குமா' என இப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டி.ஆர்.பி.ராஜா

இது தொடர்பாகப் பேசிய டி.ஆர்.பி. ராஜா ’’சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகாரிகள் புறக்கணிப்பதால், மன்னார்குடி மக்கள்  அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். மன்னார்குடி புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரையே இல்லை. இதனால், பொதுமக்கள் மழையிலும் வெயிலிலுல் நின்று சிரமப்படுகிறார்கள். மேற்கூரை அமைக்க, சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கித்  தர முயற்சிசெய்தேன். ஆனால், அதை அதிகாரிகள் புறக்கணித்துவிட்டார்கள். 

நீடாமங்கலத்தில், அண்ணா சிலை அருகே பேருந்துகள் நிற்கும் இடத்தில், மிக நீண்ட மேற்கூட்ரை அமைக்க 25 லட்சம் நிதி கொடுத்தேன். அதையும் பயன்படுத்த மறுத்துவிட்டார்கள். மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் தேர்வு எழுது கூடம், ஆடிட்டோரியம், நூலகம் போன்ற வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இவற்றை ஏற்படுத்த  25 லட்சம் ஒதுக்கினேன்.  அதையும் புறக்கணித்துவிட்டார்கள். நான் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவன் என்பதால் அதிகாரிகள்,  சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை தொடர்ந்து புறக்கணித்துவருகிறார்கள்.. இந்த வெறுப்புணர்ச்சியை அவர்கள் கைவிட வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவர்கள் நடந்துகொள்ள கூடாது எனத் தெரிவித்தார். இது, மன்னார்குடியில் மட்டும் நிகழும் அவலம் அல்ல. தமிழ்நாட்டில் வேறு எங்கெல்லாம் தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகளின் சட்ட மன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் இந்த அவலம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என டி.ஆர்.பி. ராஜா வெளிப்படையாகப் புலம்புகிறார். மற்றவர்கள் இதனை ஏனோ வெளியில் சொல்வதில்லை. ஆனால், பாதிக்கப்படுவது என்னவோ பொதுமக்கள்தான். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!