பொதுப்பணித்துறையை அதிரவைத்த கைப்பம்பு ஊழல்! தருமபுரி தகிடுதத்தம் | Dharmapuri Public works department under scanner for corruption charges

வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (27/06/2018)

கடைசி தொடர்பு:16:23 (27/06/2018)

பொதுப்பணித்துறையை அதிரவைத்த கைப்பம்பு ஊழல்! தருமபுரி தகிடுதத்தம்

`தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் என்பது எல்லைமீறி நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் கண்காணித்து தடுக்க வேண்டிய தலைமைப் பொறுப்பில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏனோ இந்த ஊழல் முறைகேட்டை அறிந்தும், தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றார். இதனால் தமிழகம் ஊழல் முறைகேட்டில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது’ என உயர் அதிகாரிகள் சிலர் வருத்தத்தோடு கூறுகின்றனர். 

கலெக்டர் மலர்விழி

அவர்களிடம் விரிவாகப் பேசினோம். ``ஆண்டுதோறும் தமிழகப் பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் நீர்வளத்துறை மூலமாகக் கொள்முதல் செய்யப்படும் பொருள்களின் விலைப்பட்டியல் வெளியிடப்படும். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. 

பொதுப்பணித்துறை விலை பட்டியல்

ஆனால், தருமபுரி மாவட்ட நிர்வாகத்தில் 2018-19-ம் ஆண்டுக்கான குடிநீர் பணிகளுக்கான கைப்பம்பு மற்றும் உதிரி பாகங்கள் ஒப்பந்த முறையில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சியில் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு கைப்பம்பு மற்றும் உதிரி பாகங்கள் கொள்முதல் செய்து அதிர வைக்கும் ஊழலை அரங்கேற்றியுள்ளனர். 

மாவட்ட கொள்முதல் விலை பட்டியல்

ஊழல் நடந்தது எப்படி?:

2018-19-ம் ஆண்டுக்கான பொதுப்பணித்துறை விலைப்பட்டியலுடன் ஒப்பிடும்போது தருமபுரி மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட கைப்பம்பு மற்றும் உதிரி பாகங்கள் 100 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் வரை கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்துள்ளனர். இந்தக் கொள்முதல் விலையை மாவட்ட கொள்முதல் கமிட்டிக் குழுவும், அதன் தலைவரான மாவட்டக் கலெக்டர் மலர்விழியும் ஒப்புதல் அளித்துள்ளதுதான் ஆச்சர்யத்தை எற்படுத்துகிறது. இதன் மூலம் 6 கோடி ரூபாய் அளவுக்கு நேரடி ஊழலுக்கு மாவட்டக் கலெக்டர் மலர்விழி காரணமாக இருக்கிறார். 

மேலும், தருமபுரி மாவட்டத்துக்கு இந்த மொத்த கைப்பம்பு மற்றும் உதிரி பாகங்கள் கொள்முதல் என்பதே தேவையற்றது. காரணம், மாவட்டத்தின் குடிநீர் தேவை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், ஓ.எச்.டி மற்றும் மின் டேங்கு மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது தவிர தமிழகத்தில் மிகவும் வறட்சியான தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 1,000 அடிக்குக் கீழ் சென்றுவிட்டதால் 100 அடி அளவில் இயங்கும் கைப்பம்பின் தேவை என்பது மிகக் குறைவு என்பதை மாவட்ட நிர்வாக அறிவிப்பிலேயே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி மதிப்பில் கைப்பம்புகளை உடனே வாங்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது? 

இதேபோல ஓ.எச்.டி, மினி டேங்கு மற்றும் குடிநீர் ஜிஐ பைப்களை 200 சதவிகிதம் கூடுதல் விலைக்கு வாங்கிக் குவித்துள்ளனர். இந்த விலை நிர்ணயம் என்பது இந்த ஆண்டு முழுவதும் நடைபெறும் கொள்முதலுக்குப் பொருந்தும் என்பதுதான் தாங்க முடியாத வருத்தத்தையும் அரசுக்குப் பெரும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து மாவட்டக் கலெக்டர் மலர்விழி கேட்டபோது, உங்களுக்கான விளக்கத்தை மாவட்டத் திட்ட அலுவலர் காளிதாஸ் வழங்குவார் என்று கூறி அனுப்பினார். மாவட்டத் திட்ட அலுவலர் காளிதாஸிடம் பேசினோம். ``கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டதில் தவறு நடைபெற்றுள்ளது என்பது நீங்கள் கேள்வி எழுப்பிய பிறகுதான், நாங்கள் கவனித்தோம். உடனே ஒப்பந்த ஆர்டர் மற்றும் கொள்முதல் நிறுத்தமும் ஸ்டாப் பேமென்ட் செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தார். 

ஆனால், தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொகுதியான பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் கைப்பம்பு மற்றும் உதிரி பாகங்கள், ஜிஐ பைப்ஸ் கொள்முதல் செய்யப்பட்டதற்கு முழுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான டான்சியில் கைப்பம்பு மற்றும் உதிரி பாகங்கள் கொள்முதல் செய்து இருந்தால் அரசுக்கு இந்தளவுக்கு இழப்பு எற்பட்டிருக்காது என்ற கேள்வியும் அதிகாரிகள் தரப்பில் தற்போது எழுந்துள்ளது.