சிக்காமலிருக்க கொள்ளையர்கள் புது டெக்னிக்! - பட்டியல் போட்டு கைவரிசை

கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய டாக்டர் வீடு

சென்னை நுங்கம்பாக்கத்தில், டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் போலீஸிடம் சிக்காமலிருக்க, சிசிடிவி கேமராவை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர். 

 சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர், இரண்டவது தெருவைச் சேர்ந்தவர் கௌசிக். இவர், ஜம்புலிங்கம் தெருவில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். மேலும், பிரபல மருத்துவமனையிலும் பணியாற்றுகிறார். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி குடும்பத்துடன் லண்டன் சென்றார் கௌசிக். பிறகு, இன்று காலை அவர் வீடு திரும்பினார். 

 கார் டிரைவருக்கு பணம் கொடுக்க அலுவலகத்தைத் திறந்தார். அப்போது அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. பூஜை அறையில் வைத்திருந்த ரூ.2,00,000, 12 வளையல்கள், 6 மோதிரங்கள்,  இரண்டு வைர நெக்லஸ்கள், 10 வாட்ச், 5 ஜோடி கம்மல்கள்,  5 ஜோடி வைர ஜிமிக்கிகள் ஆகியவை கொள்ளை போயிருந்தன. சிசிடிவி கேமரா பதிவை அவர் ஆய்வுசெய்தபோது, 20-ம் தேதி முதல் சிசிடிவி கேமரா ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். கைரேகைகள் பதிவுசெய்யப்பட்டன. கொள்ளைபோன தங்க நகை, வைர நகைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்று டாக்டர் கௌசிக் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொள்ளையர்கள், தங்களை அடையாளம் கண்டுகொள்ளாமலிருப்பதற்காக, புத்திச்சாலித்தனமாக சிசிடிவி கேமராவை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர். டாக்டரின் வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்டே கைவரிசை காட்டியுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்துவருகிறோம். அதில், டாக்டரின் வீட்டுக்குள் நுழையும் கொள்ளையர்கள் குறித்த முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. இதனால், விரைவில் அவர்களைக் கைதுசெய்துவிடுவோம். இதற்கிடையே, டாக்டர் வீட்டில் வேலை செய்யும் நபர்களிடமும் விசாரித்துள்ளோம்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!