வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (27/06/2018)

கடைசி தொடர்பு:16:39 (27/06/2018)

"அடுத்த 48வது நாளில் ஓ.பி.எஸ் முதல்வர்.!" - பெரியகுளவாசிகளின் ஆரூடம்

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தனது சொந்த ஊரான தேனியில் முன்னின்று நடத்தும் மூன்றாவது கும்பாபிஷேகம் இது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது வீட்டின் அருகில் இருக்கும் கோபால கிருஷ்ண சாமி கோயில் கும்பாபிஷேகம். இந்த வருடம் ஏப்ரல் மாதம் தீர்த்தத்தொட்டி விருபாட்சி ஆறுமுக நாயனார் கோயில் கும்பாபிஷேகம். தற்போது, பெரியகுளம் பெரியகோயில் எனப்படும் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம். மேற்சொன்ன முதல் இரண்டு கோயிலிலுமே தனது சொந்தப் பணத்தின் மூலம் பராமரிப்புப் பணிகள் செய்து முன்னின்று கும்பாபிஷேகம் நடத்தினார் பன்னீர்செல்வம். பெரியகுளம் பெரியகோயிலைப் பொறுத்தவரை ஒரு படி மேலே சென்று கோயிலை பராமரித்தது மட்டுமல்லாமல், ராஜ கோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார் பன்னீர்செல்வம்.

பெரியகோயில் பின்னணி:

ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட பெரியகோயிலின் மூலவராக ராஜேந்திர சோழீச்சுவரர் (சிவன்) இருந்தாலும் அவரது தனயன் பாலசுப்பிரமணியருக்கே கோயில் சிறப்பு. மிகப்பழைமை வாய்ந்த பெரிய கோயில் நீண்ட காலம் பராமரிப்பு இல்லாமலே இருந்தது. அதற்கு காரணம், பராமரிப்பு எனக் கோயில் மீது யார் கை வைத்தாலும் அவர்கள் அழிவது நிச்சயம் என்றும், இந்தக் கோயில் வேலையை பன்னீர்செல்வம் ஆரம்பித்தபிறகுதான் அவர் பல்வேறு பிரச்னைகளை சந்தித்திருக்கிறார் என்றும் அழுத்தமாகப் பேசுகிறார்கள் பெரியகுளம் மக்கள், ``கோயில் பராமரிப்பு எனப் பன்னீர்செல்வம் இறங்கிய பின்னர்தான் அவர் உட்பட ஐவர் கூட்டணி பற்றி ஜெயலலிதாவுக்குத் தெரியவந்து வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மகன் உட்பட சொந்தங்கள் அனைவரின் பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கிடையில், கோயிலுக்குள் சில பகுதிகளை உடைத்து அங்கிருக்கும் சிலைகளை சற்று தள்ளி வைத்தார்கள். அந்த நேரம்தான் பன்னீர்செல்வத்துக்குத் தர்மயுத்த காலம். போதாக்குறைக்குத் தனது மனைவி பெயரில் வாங்கிய கிணறு பிரச்னையும் எழுந்தது.

பன்னீர் செல்வம் , பெரியகுளம்

தொடர் பிரச்னைகளால் மொத்தமாக துவண்டு போனவர், கோயிலை பராமரிப்பதையும், கோயிலுக்குக் குறையாக இருந்த ராஜ கோபுரம் அமைக்கும் பணியையும் என்றுமே நிறுத்தச் சொல்லியதில்லை. ஊருக்கு வரும் போதெல்லாம், கோயிலுக்கு வந்து நடக்கும் வேலைகளை பார்த்துவிட்டுச் செல்வார். இந்தக் கோயிலை தொட்டு கெட்டவர்கள்தாம் அதிகம். அந்த வரிசையில் பன்னீர்செல்வமும் விதிவிலக்கு அல்ல என்றுதான் சொல்ல வேண்டும். முழுமையாக அரசியலிலிருந்து வீழ்வார் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் மேலே எழுந்தார். எல்லாவற்றுக்கும் பெரியகோயில் அனுகிரகமும், ராஜ கோபுரத்தைக் கட்டி எழுப்பியதும்தான் காரணம், நீங்கள் வேண்டுமென்றால் பார்த்துக்கொண்டே இருங்கள், கும்பாபிஷேகம் முடிந்த அடுத்த 48வது நாளில் முதல்வர் பதவிக்குப் பன்னீர்செல்வம் வருவார்!’’ என்கிறார்கள் பெரியகுளத்துவாசிகள்.

எல்லாப் பக்கமும் லாக் செய்யப்பட்டுள்ளார் பன்னீர் :

பெரியகோயில் கும்பாபிஷேகமும், ராஜ கோபுரம் கட்டியதும் ஆட்சி அதிகாரத்துக்குப் பன்னீர்செல்வம் வருவதற்காகத்தான் எனப் பேசப்படுகிறதே என அவரது நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, ``ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர் பன்னீர், அதனால்தான் கோயில்களைப் பராமரிக்க உதவிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். பெரியகோயில் அவருக்கு மிக நெருக்கமான, சொந்த ஊரில் இருக்கும் கோயில். அதனால் கோயில்மீது அவருக்குப் பிரியம் அதிகம். ஊர் மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டுதான் எல்லாப் பணிகளும் நடந்தன. தன் பங்குக்கு என்ன செய்ய முடியுமோ அதைப் பன்னீர் செய்தார். அரசு துறைகள் அனைத்துக்கும் எடப்பாடி தரப்பிடமிருந்து ரகசிய ஆர்டர் அனுப்பப்பட்டிருக்கிறது.

பன்னீர் செல்வம்

அதாவது, பன்னீர் தரப்பினருக்கு எந்த உதவியும், கான்ட்ராக்ட்களும் கொடுக்கக் கூடாது என்பதுதான் அது. முழுமையாகப் பன்னீரை எல்லாப் பக்கமும் இருந்து லாக் செய்து, அவருக்கோ, அவரது தரப்பினருகோ எந்தவிதப் பணப் பரிவர்த்தனைகளும் இல்லாமல் செய்து  வைத்திருக்கிறார்கள். இதற்காக அவர் எப்போதும் வருத்தப்பட்டது கிடையாது. இப்படியான ஒரு சூழலில், மன அமைதிக்காகவே பெரியகோயிலை கையில் எடுத்துச் சிறப்பாக முடித்திருக்கிறார். வேறொன்றும் இல்லை!’’ என்றனர்.

அடிக்கடி யாகங்கள், பூஜைகள் செய்யும் பழக்கம் உடையவர் பன்னீர். அந்த வகையில், யாருமே ஆர்வம் காட்டாத பழங்காலக் கோயில் ஒன்றைப் பராமரித்து அதற்கு ராஜ கோபுரம் அமைத்து கும்பாபிஷேகமும் நடத்துவது உள்நோக்கம் இல்லாமல் இல்லை என்றே சொல்லப்படுகிறது. 48 நாள் ஆகட்டும். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்!


டிரெண்டிங் @ விகடன்