வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (27/06/2018)

கடைசி தொடர்பு:19:38 (27/06/2018)

`பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்!’ - சர்ச்சையில் மோடியின் 2013 ட்வீட்

`பெண்களுக்கு ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்’ என்று அண்மையில் வெளியான கருத்துக்கணிப்பு பற்றிய செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கணிப்பு முடிவைத் தேசிய பெண்கள் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பா.ஜ.க-வை சேர்ந்த சிலரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேனகா காந்தியின் தலைமையில் இயங்கும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் இந்த ஆய்வை நிராகரித்துள்ளது. ஆனாலும், இந்த ஆய்வு முடிவுகளை வைத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை பொதுமக்கள் இணையத்தில் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். 

இங்கிலாந்தைச் சேர்ந்த தாம்ஸன் ராய்ட்டர்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள  550 வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டு, 193 நாடுகளில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. சுகாதாரம், ஆண்-பெண் பாகுபாடு, பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கருத்துக்கணிப்பில் பெரும்பாலான பிரச்னைகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக வாக்குகள் பதிவாகின. எனவே, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கே முதலிடம் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் அறிவித்தது. கருத்துக்கணிப்பு முடிவை இந்தியாவின் தேசியப் பெண்கள் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.


`இந்தியா என்னும் மிகப் பெரிய நாட்டில், குறிப்பிட்ட சிலரின் கருத்துகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வு நாடு முழுவதற்கும் பொருந்தாது’ என்னும் வாதத்தைப்  பெண்கள் ஆணையம் முன்வைத்துள்ளது .

இந்த ஆய்வு முடிவை, பெண்கள் ஆணையம், மத்திய பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் உள்ளிட்டவை மறுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். ஆம்... அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? 

 

மோடி
 

இதே ஆய்வு  6 ஆண்டுகளுக்கு முன்பும் நடத்தப்பட்டது . 2013ம் ஆண்டு அதாவது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது . அந்த ஆய்வு முடிவைத்  பற்றி மோடி ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார் .   `உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது . பெண்கள் எப்போதுதான் பாதுகாப்பான உணர்வார்கள் ?’ என்று   2013ம் ஆண்டு மோடி ட்விட்டரில் பதிவிட்டதற்கான ஆதாரம் ..... 

மோடி
 

ஆக , இந்த ஆய்வறிக்கையை மோடியே ஏற்றுக் கொண்டுள்ளார் .  `காங்கிரஸ் ஆட்சியில் நான்காவது இடத்தில் இருந்த இந்தியா தற்போதைய ஆட்சியில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது’ என்று நெட்டிசன்கள் மோடியின் பழைய ட்வீட்டை கிளறி ரிட்வீட் செய்து வருகிறார்கள் . பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தபோதே ட்விட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய மோடி , முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதைப்  பற்றி எந்தக்  கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ஏன் ?  

நீங்க எப்படி பீல் பண்றீங்க