`சேலம் - சென்னை 8 வழிச்சாலை, சட்டத்துக்கு எதிரான சாலை!’ - சீறும் அன்புமணி

அன்புமணி

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தைப் பற்றி மக்களிடம் கருத்துகளைக் கேட்பதற்காகப் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று சேலம் வந்திருந்தார். தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில் பேசிய அன்புமணி ராமதாஸ், ''சேலம் டு சென்னை 8 வழிச் சாலைஅமைக்கப்படுவது சம்பந்தமாக நான் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். எந்த ஒரு விவசாயியும் நிலம் தர மாட்டோம் என்றுதான் சொன்னார்கள். நிலம் எடுக்கப்பட்டால். அதேபோல மாற்று நிலம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சில விவசாயிகள் முன் வைத்தனர்.

8 வழிச் சாலையைப் பற்றி முதல்வர் சட்டசபையில் பேசியது பொய்யான தகவல். குறிப்பாக, இந்தத் திட்டத்துக்கு 277 கி.மீட்டர் சேலம் டு சென்னை 2.15 மணி நேரத்தில் போகலாம் என்றும் இத்திட்டத்துக்கு 1,900 ஹெக்டேர் எடுக்கப் போவதாகவும் சட்டசபையில் குறிப்பிட்டு விட்டு, வெளியே வந்து 95, 96 சதவிகித மக்கள் தானாகவே முன்வந்து நிலங்களைத் தருவதாகவும் அவரைச் சார்ந்தவர்கள் ஒரு ஏக்கருக்கு 21 லட்சம் முதல் 9 கோடி வரை இழப்பீடு தருவதாகவும் சொல்கிறார்கள்.

 நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. சேலம் டு சென்னைக்கு ஏற்கெனவே 3 சாலைகள் இருக்கின்றன. 8 வழி பசுமைச் சாலை போட்டால் சென்னைக்கு 2.15 மணி நேரத்தில் போகலாம் என்று சொல்கிறார். இவர் சொல்வதைப் பார்த்தால் கி.மீட்டருக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும். இந்தியாவில் மணிக்கு 100 கி.மீ வேகத்துக்கு மேலே எந்தச் சாலையிலும் போக முடியாது. பேருந்து நெருக்கடி என்கிறார்.

சேலம் டு சென்னைக்கு ஒரு நாளைக்கு 80,000 வாகனங்கள் சென்றால் 8 வழிச் சாலை போடலாம். ஆனால், சேலம் டு சென்னைக்கு தோராயமாக 29,000 வாகனங்கள் மட்டுமே தினசரி செல்கின்றன. எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனதும் ஜெயலலிதாவைப்போல நினைத்துக்கொண்டு சந்திரமுகியாக மாறிவிட்டார். என் தொகுதி மக்களிடம் கருத்துகளைக் கேட்கக்கூட அனுமதி இல்லை. இந்த 8 வழிச் சாலை சட்டத்துக்கு எதிரானது. இதை நாங்கள் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அணுகுவோம். இதுபற்றி நாடாளுமன்றத்திலும் பேசுவேன். இத்திட்டத்துக்கு 2,800 ஹெக்டேர் நிலம் எடுக்கப்போகிறார்கள். அதாவது 7,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவோம்'' என்றார்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!