வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (27/06/2018)

கடைசி தொடர்பு:19:20 (27/06/2018)

`சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக அரசிடமிருந்து அழுத்தம் வருகிறது!’ - குமுறிய பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் வழக்குத் தொடர்பாகத் தனக்கு அரசிடமிருந்து அழுத்தங்கள் வருவதாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொன்மாணிக்கவேல்

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்கக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலை கடத்தல் தொடர்பாக சிறப்புக்  குழுவை அமைத்தது. இதற்கான ஐபிஎஸ் அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமித்து ஒரு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் ஆஜராகி, தன் தரப்பு கருத்துக்களை தெரிவித்தார். அப்போது அவர், ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த 21 உத்தரவுகளை இதுவரை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும், சிலைகள் வைப்பதற்கான பாதுகாப்பு அறையை இதுவரை கட்டித்தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள 10 பேரை, அரசு திடீரென்று பணியிட மாற்றம்செய்துள்ளது என்றும், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தொடர்பாக தனக்கு அழுத்தங்கள் வருவதாக அவர் நீதிபதி முன்பு தெரிவித்தார். இந்த வழக்கில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, சிலை தொடர்பான விசாரணை ஆவணங்களையும் விசாரணை அதிகாரி அரசுக்குத் தர மறுப்பதாகவும், நீதிமன்றத்தில் தாக்கல்செய்வேன் என்று தெரிவிக்கிறார் என அரசு தரப்பு வாதத்தை முன் வைத்தார். கண்டெடுக்கப்பட்ட சிலைகள்குறித்தும், இதுவரை யாரைக் கைதுசெய்தார்கள் என்றும், கைதுசெய்தவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளதா? இதுவரை எதுவும்  தெரியவில்லை என அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

நீதிமன்றம்

இதை விசாரித்த நீதிபதி மகாதேவன், தனியார் வசம் உள்ள கோயில்களில் எந்தச் சிலைகளும் காணாமல்போனது இல்லை. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள சிலைகள்தான் காணாமல்போகின்றன. தமிழக அரசு கோயில்களை முறையான பராமரிப்பின்றி இருப்பதுதான் சிலைகள் காணாமல் போகக் காரணம்; கோயிலை முறையாகப் பராமரிக்கவில்லை என்றால், நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும். நீதிமன்றத்துக்குத் தெரிவிக்காமல், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரை இடமாற்றம் செய்யக் கூடாது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை இதுவரை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. வரும் 11-ம் தேதிக்குள் அனைத்தும்  நடைமுறைப்படுத்தவில்லை என்றால், தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்'  என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.