`அணு உலை திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை! முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு வலியுறுத்தல்

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுஉலை திட்டத்துக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு வலியுறுத்தினார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை திட்டத்துக்கு நிலம் கொடுத்த அப்பகுதி மக்களுக்கு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு வலியுறுத்தினார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்தார். 

அணு உலை - வேலை வாய்ப்பு கோரிக்கை

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோது, உள்ளூர் மக்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, அணுமின் திட்டப் பணிகளில் உள்ளுரைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், நிலம் கொடுத்தவர்களில் ஒரு சதவிகிதம் பேருக்குக்கூட பணி வழங்கப்படவில்லை. அதனால், உள்ளூர் இளைஞர்களுக்குப் பணி வழங்க வலியுறுத்தி, தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவருமான அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், இரண்டு அணுஉலைகள் செயல்பட்டுவருகிறது. மேலும், இரு அணுஉலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த வளாகத்தில், சி மற்றும் டி பிரிவு பணிகளுக்குப் பணி நியமனம் நடைபெற்றுவருகிறது. தற்போது, 46 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. 

அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோது, 1999-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி, அணுமின் நிலையத்துக்காக நிலம் வழங்கிய உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், அந்த விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு அணுஉலை நிர்வாகத்தில் உயர் பதவிகளில் இருக்கும் சில அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு, வெளி மாநிலங்களைச் சேர்ந்த நபர்களுக்கும் அதிகாரிகளின் உறவினர்களுக்கும் வேலை கொடுக்கிறார்கள். 

ஆனால் உள்ளூர் மக்கள், நிலத்தை அணுஉலை நிர்வாகத்துக்காக கொடுத்ததால் விவசாயத்தை இழந்துவிட்டு சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். அணுமின் நிலையத்துக்காக நிலம் கொடுத்தவர்களில் ஒரு சதவிகிதம் பேருக்குக்கூட இதுவரை பணி வழங்கவில்லை என்பது வேதனைக்குரியது. அதனால், தற்போது 46 பேருக்கு வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவை ரத்துசெய்துவிட்டு, உள்ளூர் மக்களுக்கும் அணுமின் நிலையத்துக்கும் நிலம் வழங்கியவர்களுக்குப் பணி வழங்க வேண்டும். 

மத்திய அரசின் கொங்கன் ரயில்வே, இஸ்ரோ மையம் ஆகியவற்றில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதி மக்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் நேர்முகத் தேர்வில் 15 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. அதுபோல, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிநியமனத்திலும் பின்பற்றப்பட வேண்டும். எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறேன். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், ஜுலை 16-ம் தேதி அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!