வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (27/06/2018)

கடைசி தொடர்பு:19:00 (27/06/2018)

`மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை!’ - ஆர்டிஐ மூலம் வெளிவந்த பகீர் தகவல்

'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை' என ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிதி

 மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். மொத்தம் 200 ஏக்கரில், 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் மத்திய சுகாதாரம் மற்றும்  குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் இந்தியா டுடே செய்தி நிறுவனம் கேட்ட கேள்விகளுக்கு, தமிழகத்தில் தோப்பூரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மருத்துவமனையைக் கட்டி முடிப்பதற்கான காலக்கெடு எதுவும் இறுதிசெய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியான அடுத்த நாளே இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆர்டிஐ மூலம் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், பீகார், குஜராத் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதும், எப்போது கட்டிமுடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க மேலும் காலதாமதமாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.