பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு! கிணற்றில் குதித்த திருவண்ணாமலை விவசாயி

திருவண்ணாமலையில், பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயி கிணற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசுமைச் சாலை

பசுமைச் சாலைக்காக சேலம் முதல் சென்னை இடையிலான ஊர்களில்  நில அளவைப் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் எனப் பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அனைவரது எதிர்ப்பையும் மீறி, சில இடங்களில் அளவைப் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இன்று, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சே.நாச்சிப்பட்டு மற்றும் மண்மலை ஆகிய கிராமங்களில் நில அளவைப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. நிலத்துக்குச் சொந்தமானவர்கள் தவிர வேறு யாரும் அருகில் வரக் கூடாது என போலீஸாரின் பலத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அப்போது, மணிகண்டன் என்ற விவசாயிக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் அளவைப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதைத் தடுக்க, விவசாயி எவ்வளவோ முயன்றார். ஆனால் முடியவில்லை. காவல்துறையினர் சற்று அசந்த நேரத்தில், தனது நிலத்துக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் மணிகண்டன். உடனடியாக அவரைப் பின் தொடர்ந்து குதித்த காவலர்கள், விவசாயியை மீட்டனர்.

 அடுத்த 5 நிமிடங்களில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு விவசாயி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். காவல் துறையினர் இந்த இருவரையும் கைதுசெய்து, செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனர். மேலும், பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில விவசாயிகள் அதே இடத்தில் சாலை மறியில் போராட்டம் நடத்தினர். அவர்களையும் கைதுசெய்து, செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். விவசாயிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!