வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (27/06/2018)

கடைசி தொடர்பு:20:00 (27/06/2018)

வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட பகுதியில் ராமேஸ்வரம் நீதிபதி நேரில் ஆய்வு!

ராமேஸ்வரம் அருகே, நேற்று முன் தினம் கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்துப் பொருள்களை ராமேஸ்வரம்  நீதிபதி இன்று நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

 ராமேஸ்வரம் அருகே, நேற்று முன் தினம் கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்துப் பொருள்களை ராமேஸ்வரம் நீதிபதி இன்று நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

தங்கச்சிமடத்தில் கைபற்றப்பட்ட வெடிப்பொருட்களை நீதிபதி ஆய்வு

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில், மீனவர் எடிசன் என்பவர்  வீட்டில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்வதற்காகக் குழி தோண்டியுள்ளனர். அப்போது, துருப்பிடித்த நிலையில் இரும்புப் பெட்டிகள் தென்பட்டுள்ளன. அவற்றை வெளியே எடுத்து திறந்துபார்த்தபோது, அதில், ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் இருந்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள், தங்கச்சிமடம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார், அந்தப் பகுதியைச் சுற்றி,மேலும் தோண்டியபோது, இயந்திரத் துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய 10,828 தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள், ஏவுகணையில் பயன்படக்கூடிய வெடிபொருள்கள், நிலக் கன்னிவெடிகள், ஒரே நேரத்தில் 15 டெட்டனேட்டர்களை வெடிக்கும் திறன் கொண்ட டைனமோ, வெடிகுண்டுகளை வெடிக்கப் பயன்படுத்தும் இரும்பு ஸ்லம்புகள், எச்சரிக்கை வெடிகள் என ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

தங்கச்சிமடத்தில் நீதிபதி ஆய்வு

மதுரையிலிருந்து வந்திருந்த வெடிகுண்டு கண்டுபிடிப்புக் குழுவினர், வெடிபொருள்கள் சிக்கிய பகுதிகளில் நேற்று நவீன கருவிகளின் உதவியுடன் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வேறு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து,  கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களை வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஆய்வுசெய்தனர். சிக்கிய வெடிபொருள்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை என்பது அப்போது தெரிய வந்தது. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை சேதம் அடைந்த நிலையில் உள்ளதால், இவற்றால் ஆபத்து ஏதும் இல்லை எனத் தெரிய வந்தது. மேலும், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஏவுகணை வெடிமருந்துக் குப்பிகள் மட்டும் தனியாக பிரித்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமேஸ்வரம் நீதிபதி (பொறுப்பு) பாலமுருகன், தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்துக்கு இன்று சென்றார். அங்கு, மணலில் குழிதோண்டி பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள வெடிபொருள்கள், கன்னிவெடிகள், எச்சரிக்கை வெடிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை மற்றும் அளவுகளைச் சரிபார்த்தார். மேலும், வெடிபொருள்கள் கிடைத்த இடத்தையும் நீதிபதி சென்று பார்த்தார். இதைத் தொடர்ந்து, தங்கச்சிமடத்தில் கைப்பற்றப்பட்டு தற்போது ராமநாதபுரம் ஆயுதப்படை கிடங்கில் வைக்கப்பட்டுள்ள எந்திரத் துப்பாக்கிக் குண்டுகளையும்  பார்வையிட்டார். நீதிபதியுடன் ராமேஸ்வரம் வட்டாட்சியர்கள் சந்திரன், அப்துல்ஜபார், டி.எஸ்.பி. மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

 போலீஸ் பாதுகாப்புடன் மண்ணில் மூடி வைக்கப்பட்டுள்ள வெடிபொருள்களை நீதிபதி பார்வையிட்டுச் சென்றுள்ளதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, சில நாள்களுக்குள் அவற்றை செயலிழக்கச் செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.