வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (27/06/2018)

கடைசி தொடர்பு:21:20 (27/06/2018)

`ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவேண்டியதில்லை!’ - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆலைக் கலன்களை முறையாகப் பராமரிக்க ஆலைத் தரப்பில் மின் இணைப்பு கோரிய வழக்கில், 'ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கவேண்டியதில்லை' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, கடந்த மே-22-ம் தேதி நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடந்த மே-28-ம் தேதி அரசாணையும் வெளியிடப்பட்டு, ஆலை சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூன் 16-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சல்ஃபியூரிக் ஆசிட் கசிவு ஏற்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, சார் ஆட்சியர் தலைமையிலான குழு  ஆய்வுசெய்து டேங்கர் லாரிகளில் சல்ஃபியூரிக் ஆசிட் வெளியேற்றும் பணி 6 நாள்களாக நடைபெற்றது.  இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் பொது மேலாளர் சத்யப்பிரியா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ”எங்கள் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டது. இதனால், ஆலைக் கலன்களில் உள்ள வேதிப் பொருள்களை முறையாகப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கந்தக அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவது அவசியம்.எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமலும், பாதுகாப்பான முறையில் அகற்றவும், ஆலைக் கலன்களை முறையாகப் பராமரிக்கவும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். இப்பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை எங்கள் நிறுவன ஊழியர்களே மேற்கொள்ளவும் அனுமதி அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

”எந்தப் பிரச்னையும் இல்லாமல் கசிவைச் சரிசெய்ய வேண்டும். இதில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டால், எங்கள் மீதே குற்றம் சாட்டப்படும். பராமரிப்புப் பணியில் நிபுணத்துவம் பெற்ற ஊழியர்களைக்கொண்டே சரிசெய்யப்பட வேண்டும்” என ஆலைத் தரப்பில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. ”ஆலைக்கு மின் இணைப்பு அளிப்பது அவசியமா” என்பதுகுறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்திருந்தனர். 

இந்நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. “ஆலைக்கு ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்திக்கொடுத்திருப்பதால், மின் இணைப்பு வழங்கவேண்டியதில்லை. இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையை 7 பேர் கொண்ட குழு ஆய்வுசெய்து அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், ரசாயன அமிலங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன” என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். இதையடுத்து, இவ்வழக்கை வரும் ஜூலை 6-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.      

நீங்க எப்படி பீல் பண்றீங்க