இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான கலால் வரி உயர்வு? - அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் | TN cabinet approves to increase excise tax on imported liquor

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (27/06/2018)

கடைசி தொடர்பு:21:40 (27/06/2018)

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான கலால் வரி உயர்வு? - அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான கலால் வரியை 12 சதவிகிதமாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம்

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனக் கடந்த 20-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 200 ஏக்கர் பரப்பளவில்1,500 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வசதிகளுடன் விரைவில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிவிப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்றனர். இதனிடையே தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தும் பசுமை வழிச் சாலை திட்டம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் CEAT டயர் தொழிற்சாலையை அமைக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான கலால் வரியை 12 சதவிகிதமாக உயரத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, நலிவடைந்த சர்க்கரை ஆலைகளைத் தனியாருக்கு விற்கவும் தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.