சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவில் விடிய விடிய கலைநிகழ்ச்சி நடத்த கோரிக்கை!

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின்போது இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகளை நடத்த காவல்துறை அனுமதிக்க மறுப்பதால், விடிய விடிய கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டி கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின்போது இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகளை நடத்த காவல்துறை அனுமதிக்க மறுப்பதால், விடிய விடிய கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டி கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஆடித்தபசு - வியாபாரிகள் கோரிக்கை

தென் மாவட்டங்களில் முக்கியமான சிவாலயங்களில் ஒன்றாகக் கோமதியம்மாள் உடனுறை சங்கரநாராயணர் திருக்கோயில் உள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆடித்தபசு திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் ஜுலை 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோயிலின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு தேரோட்டம் 27-ம் தேதி நடக்க உள்ளது. 

இந்த விழா நடக்கும் 12 நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பாக நிகழ்ச்சிகள் பாரம்பர்யமாக நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் விழாவின்போது கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட கோயிலின் அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளும் விடிய விடிய நடத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாகவே பாதுகாப்பு கருதியும் நீதிமன்ற உத்தரவுப்படியும் இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகளை நடத்த காவல்துறை அனுமதிப்பதில்லை. 

இந்த ஆண்டிலும் இரவு 10 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது எனக் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால், ஆடித்தபசு திருவிழாவின் தன்மை குறைந்துபோகும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. அதனால், கலைநிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளையும் இரவு முழுவதும் நடத்த அனுமதிக்க வேண்டும் என அனைத்து சமுதாயத்தினர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளித்தனர். 

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் கலந்து பேசிவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இதுபற்றி பேசிய அனைத்து சமுதாயப் பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், ``எங்கள் கோரிக்கை குறித்து பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்புகிறோம். கடந்த காலங்களைப் போலவே இரவு முழுவதும் திருவிழாவின் 12 நாள்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம். எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் ஜுலை 3-ம் தேதி சங்கரன்கோவில் நகரில் முழுஅடைப்புப் போராட்டம் நடத்துவோம்’’ எனத் தெரிவித்தனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!