வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (27/06/2018)

கடைசி தொடர்பு:23:00 (27/06/2018)

குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னையில் நிர்மலா தேவி! புழல் சிறையில் அடைப்பு

குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை அழைத்துவரப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

குரல் பரிசோதனை

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். மாணவிகளுடன் நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி, வைரலாகியது. இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். மாணவிகளுடன் அவர் பேசிய ஆடியோவின் உண்மைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில், அவரை சென்னைக்கு அழைத்துச்செல்ல சிபிசிஐடி போலீஸார் முடிவுசெய்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மூன்று நாள்கள் மட்டும் நிர்மலா தேவியை சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த அனுமதியளித்தனர். இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவியை மதுரை போலீஸார் சென்னைக்கு அழைத்துவந்தனர். நாளை அவருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதனிடையே, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.