வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (27/06/2018)

கடைசி தொடர்பு:20:53 (27/06/2018)

`நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!’ - சேலம் முதன்மை நீதிமன்றம் உத்தரவு

மன்சூர் அலிகான்

`சேலம் டு சென்னை 8 வழிச் சாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன்’ என்று பேசியதால் நடிகர் மன்சூர் அலிகான் சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஓமலூர் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில், இன்று சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மோகன்ராஜ் ஜாமீன் வழங்கியுள்ளார்.

சேலம் காமலாபுரம் விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்காக அதைச் சுற்றியுள்ள 570 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளுக்கு கடந்த மாதம் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் தும்பிப்பாடி மாரியம்மன் கோயில் அருகே விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பேசினார். அப்போது விமான நிலைய விரிவாக்கத்துக்கு மட்டுமல்ல 8 வழிச் சாலை வந்தால் 8 பேரை வெட்டுவேன் என்று பேசியுள்ளார்.  

இதையடுத்து, சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். அதையடுத்து கடந்த 17-ம் தேதி சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு, ஓமலூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டார். மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை விசாரித்த  ஓமலூர் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் நிராகரித்தது. அதையடுத்து, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மோகன்ராஜ், மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியிருக்கிறார்.  

இது குறித்து மன்சூர் அலிகானின் வழக்கறிஞர் மாயன் கூறுகையில், ``கடந்த 22-ம் தேதி ஓமலூர் தாலுகா நடுவர் நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் மறுத்ததை அடுத்து, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தோம். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியிருக்கிறது. விசாரணையின்போது ஆஜரானால் போதுமானது என்று தெரிவித்திருக்கிறது. இது எங்கள் தரப்பினருக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார்.