`8 வழிச் சாலை திட்டத்தை நிறுத்த வேண்டும்!’ - பொங்கல் வைத்து அம்மனிடம் மனு வழங்கிய மக்கள்

சேலம் மாவட்டத்தில், 8 வழி பசுமைச் சாலைக்கு நில அளவைசெய்து முடித்துவிட்டார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் என்ன செய்தால் இந்த 8 வழிச் சாலையை நிறுத்த முடியும்? தம் நிலங்கள் பறிக்கப்படுவதை எப்படித்  தடுக்க முடியும் என்ற கையறு நிலையில், கடவுளே கதியாக கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

இதன் வெளிப்பாடாக, சேலம் மின்னாம்பள்ளி பஞ்சாயத்தில் குள்ளம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து, 8 வழிச் சாலையைத் தடுத்துநிறுத்த வேண்டும் என மனு கொடுத்தனர். அப்போது, முருகேசன், பழனியம்மாள், பார்வதி ஆகியோருக்கு ஆக்ரோஷமாக சாமி வந்தது. ஊர் மக்களைப் பார்த்து, '' டேய்... நீங்க யாரும் பயந்துக்க வேண்டாம். உங்க நெலத்தை எடுக்க முடியாது. நான் நெலத்த விட மாட்டேன்'' என்று அருள் வாக்கு கூறினர்.

இதுகுறித்து அங்கிருந்த அரவிந்த் என்பவரிடம் பேசினோம். '' நாங்க இந்த ஏரியாவில் காலங் காலமா வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த 8 வழிச் சாலையால் எங்க கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் பறிபோகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. முட்டுக்கல்லும் போட்டுட்டு போயிட்டாங்க. நாங்க இந்த வீட்டையும்  நிலத்தையும் விட்டுட்டு எங்க போவதென்றே தெரியவில்லை.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறோம். எங்களுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்களையும் சிறையில் அடைத்து விடுகிறார்கள். எங்களுக்கு அரசாங்கத்தை எதிர்க்கும் அளவுக்கு பலம் இல்லை. கடவுள்தான் இந்த 8 வழிச் சாலையைத் தடுத்து நிறுத்த வேண்டும். எங்க பெரியாண்டிச்சி அம்மனுக்கு, ஒரு வேளை சாப்பிடாமல் பயபக்தியோடு  இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால், கேட்ட வரங்களையெல்லாம் தரும்.

அதனால், எங்க ஊர்க்காரர்கள் எல்லோரும் சேர்ந்து பெரியாண்டிச்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து, எங்க குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்தோம். பெரியாண்டிச்சி அம்மன் முருகேசன், பார்வதி, பழனியம்மாள் மீது இறங்கி, `8 வழிச் சாலைக்கு நிலம் எடுக்க விட மாட்டேன். பயப்படாமல் இருங்கள்’ என்று சொல்லியிருக்கிறது. இது எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. பெரியாண்டிச்சி அம்மன் சொன்ன மாதிரி செய்தால் நல்லாயிருக்கும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!