நெல்லையப்பர் தேரோட்டத்தில் இன்ஸ்பெக்டரை தோளில் தூக்கிக் கொண்டாடிய பக்தர்கள்! | an inspector who helped in nellaiyappar car festival was celebrated by devotees

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/06/2018)

கடைசி தொடர்பு:11:22 (28/06/2018)

நெல்லையப்பர் தேரோட்டத்தில் இன்ஸ்பெக்டரை தோளில் தூக்கிக் கொண்டாடிய பக்தர்கள்!

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடந்து முடிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், அதற்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நெல்லை டவுன் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்தை பொதுமக்களும் பக்தர்களும் தோளில் தூக்கிக் கொண்டாடி மகிழ்ந்த நெகிழ்ச்சி மிகுந்த சம்பவம் நடைபெற்றது.

நெல்லையப்பர் தேரோட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

நெல்லையின் அடையாளமும், தென் தமிழக சைவத் திருத்தலங்களில் முக்கியமானதுமான நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து முடிந்தது. தேர் நிலைக்கு வந்தபோது, தேரை வடம் பிடித்து இழுத்து வந்த பக்தர்களும் தேருக்கு சறுக்குக் கட்டைகளை போட்டவர்கள் மற்றும் தடி போட்டவர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

அவர்கள், இந்தச் செயலுக்கு உறுதுணையாகச் செயல்பட்ட நெல்லை டவுன் காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரத்தை தோளில் தூக்கிக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஏராளமான காவலர்களும் காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் கடந்த சில தினங்களாகச் செயல்பட்டு வந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மட்டும் பக்தர்கள் மனதில் இடம் பிடித்தது எப்படி எனத் தேர் சீராக இயங்க சறுக்குக் கட்டைகளையும் தடிகளையும் போட்டவர்களிடம் பேசினோம்.

``பழைமையான நெல்லையப்பர் தேர் 5 அடுக்குகளுடன் 450 டன் எடையைக் கொண்டது. இந்தத் தேர் நின்ற நிலையில் இருக்கும்போது அதனை வடம் பிடித்து இழுத்துச் செல்ல முடியாது. அதனைத் தடி போட்டு லேசாக அசைக்கும்போது மட்டுமே பக்தர்கள் இழுத்தால் தேர் நகரும். அதேபோல தேரைத் திருப்பவும் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் சறுக்குக் கட்டைகள் மிகவும் அவசியம். அதனை லாவகமாகப் போட்டு தேரைத் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

இந்தப் பணிகளுக்கான ஊழியர்கள் மலையாளமேடு, தென்பத்து ஆகிய கிராமங்களில் இருந்து பரம்பரையாக வருகிறார்கள். அவர்கள் இரவு பகலாக தடிகளையும், சறுக்குக் கட்டைகளையும் தயார் நிலையில் வைக்கும்போது, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் அவர்களுக்கு மிகவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வந்தார். அதனால்தான் தேர் நிலையை அடைந்ததும் அந்தப் பணியில் ஈடுபட்டவர்கள் அவரைத் தூக்கி உற்சாகத்தையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்கள்’’ என்கிறார்கள். 

பணியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்

இதுபற்றி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்திடம் பேசியபோது, ``தேரை வடம் பிடித்து இழுப்பது மட்டுமே பக்தர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், தேருக்குத் தடிகளையும் சறுக்குக் கட்டைகளையும் போட்டு அதனைக் கட்டுப்பாட்டில் வைத்து வலம் வரவைக்கும் பணியானது மிகவும் சவால் மிகுந்தது. நான் இந்தப் பகுதியில் 2003 முதல் 2005 வரை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினேன். இப்போது இரண்டு வருடங்களுக்கும் மேலாக இன்ஸ்பெக்டராக பணியாற்றுவதால் அந்தப் பணிகளைச் செய்பவர்களை நன்கு அறிவேன். 

அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாலும், 5 முறை தேரோட்டத்தில் கலந்துகொண்டதாலும் அவர்களை அன்புடனும் நேசத்துடனும் பேசிப் பழகி வருகிறேன். அதன் காரணமாக அவர்களும் என் மீது அன்பு செலுத்தினார்கள். பாசப்பிணைப்பினால் ஏற்பட்ட நிகழ்வாகவே அதனைக் கருதுகிறேன். இந்த வருடம் காவல்துறை அதிகாரிகளின் சரியான திட்டமிடல் காரணமாக குற்றச் செயல்கள் நடக்காமல் சிறப்பான வகையில் தேரோட்டம் நடந்து முடிந்திருக்கிறது’’ என்றார் மகிழ்ச்சியுடன்.