வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (28/06/2018)

கடைசி தொடர்பு:07:30 (28/06/2018)

வடுவூர் ஏரியில் ஆர்வத்துடன் பொறுக்குமண் எடுக்கும் விவசாயிகள்!

தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற ஏரிகளில் ஒன்றாகத் திகழ்கிறது வடுவூர் ஏரி. தஞ்சை- திருவாரூர் செல்லும் சாலையில் பல நூறு ஏக்கரில் பரந்து விரிந்து காட்சி அளிக்கும் இந்த ஏரி பறவைகள் சரணாலயமாகவும் திகழ்கிறது. பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த ஏரியானது கடந்த பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமலே இருந்து வந்தது. இந்நிலையில்தான் இந்த ஏரியில் பொறுக்கு மண் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாகக் கோரிக்கை எழுப்பி வந்த நிலையில் தற்பொழுது தமிழக அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த உற்சாகத்தோடு பொறுக்கு மண் எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வடுவூர் ஏரியில் மண் எடுக்கும் பணி

 316 ஏக்கரில் பரந்து விரிந்து காட்சி அளிக்கும் இந்த ஏரிக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான அரிய வகை பறவைகள் வந்து செல்லும். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரி நல்ல நிலையில் இருந்தபோது, இதில் மழைநீர் தேங்கி, இப்பகுதியில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது. ஆண்டுக்கொரு முறை வடுவூர் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த ஏரியில் இருந்து பொறுக்கு மண்ணை எடுத்துச் சென்று தங்களது நிலங்களில் போடுவார்கள். இதனால் விளைநிலங்கள் வளமாவதோடு மட்டுமல்லாமல், செலவே இல்லாமல் இந்த ஏரி ஆழப்படுத்தப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. இதை வனத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து பறவைகள் சரணாலயமாக அறிவித்த பின்பு, முறையான பராமரிப்பு இல்லாமல் நீர் பிடிப்புத் திறனை இழந்ததாக இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தார்கள். 

இந்நிலையில்தான் மீண்டும் இங்கு பொறுக்குமண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாகக் கோரிக்கை எழுப்பி வந்தார்கள். 316 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 150 ஏக்கர் பரப்பில் 1 மீட்டர் ஆழத்தில் பொறுக்கு மண் எடுக்கத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மொத்த 4 லட்சம் கன அடி பொறுக்குமண் கிடைக்கும். தற்பொழுது நெல் சாகுபடிக்கான பணிகள் தொடங்கியிருப்பதால், இப்பகுதி விவசாயிகள் மிகுந்த ஆர்வத்தோடு தங்களது சொந்த செலவில் இங்கிருந்து பொறுக்கு மண்ணை வெட்டி எடுத்துச் செல்கிறார்கள்.