உலகக்கோப்பை: சமனில் முடிந்த பரபரப்பான ஆட்டம்..! அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து!

ரஷ்யாவில் தற்போது கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று ’குரூப் இ’ பிரிவில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு போட்டியில் பிரேசில் செர்பியா அணிகளும், மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்து கோஸ்டா ரிகா  அணிகளும் மோதின. இந்தப் பிரிவில் பிரேசில், சுவிட்சர்லாந்து மற்றும் செர்பியா அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்ததால், இந்த இரு போட்டிகளுமே அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளாக கருதப்பட்டன. 

உலகக்கோப்பை: சுவிட்சர்லாந்து - கோஸ்டா ரிகா

இதில் சுவிட்சர்லாந்து - கோஸ்டா ரிகா அணிகள் மோதிய போட்டியில் தொடக்கம் முதலே அனல் பறந்தது. கோஸ்டா ரிகா ஏற்கெனவே வெளியேறிவிட்டபோதும் ஆறுதல் வெற்றிக்காகப் போராடியது. சுவிட்சர்லாந்து அணியைப் பொறுத்தவரையில் இன்றைய போட்டியை டிரா செய்தாலே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறி விடலாம். 

துவக்கம் முதலே இரு அணிகளும் அட்டாக் கேமை கையில் எடுத்தன. இரு அணி வீரர்களும் மாறி மாறி பாக்ஸை முற்றுகையிட்டனர். துவக்கத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் கோல் கீப்பர்களால் தடுக்கப்பட்டது. ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில், சுவிட்சர்லாந்து அணிக்குக் கிடைத்தது முதல் கோல். அந்த அணியின் டிஸிமைலி, எம்போலோ அளித்த பாஸை, அழகாகக் கோலாக்கி சுவிட்சர்லாந்து முன்னிலை பெற உதவினார். அதன் பின்னர் முதல் பாதியில் இரு அணிகளுக்கும் கோல் ஏதும் கிடைக்கவில்லை. முதல் பாதி முடிவில் சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலையில் இருந்தது. 

சுவிட்சர்லாந்து கோஸ்டா ரிகா

இரண்டாவது பாதியின் 52-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் கோல் அடிக்கும் முயற்சியை கோஸ்டா ரிகா அணியின் கோல் கீப்பர் தடுத்தார். அதன் பின்னர் 56-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா அணி முதல் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தது. அந்த அணிக்குக் கிடைத்த கார்னர் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட கெண்டால் வாஸ்டன், தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் மீண்டும் ஆட்டத்தில் அனல் பறந்தது. 

சுவிட்சர்லாந்து கோஸ்டா ரிகா

ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் ஜோசப் ட்ரமிக் கோல் அடிக்க சுவிட்சர்லாந்து 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது. ஆனால், இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை சுவிட்சர்லாந்து ரசிகர்களுக்கு. இஞ்சுரி டைமில்(90+2) கோஸ்டா ரிகா அணியின் பிரையன் ரூயிஸ் பெனால்டி வாய்ப்பில் அடித்த பந்தை, சுவிட்சர்லாந்தின் யான் சாமர் தடுக்க முயன்றபோது அது சேம் சைடு கோல் ஆனது. இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. 

சுவிட்சர்லாந்து அணி ஆடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி 2 டிரா என 5 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் வெற்றிபெற்ற பிரேசில், இ குரூப்பில் முதலிடம் பிடித்து அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது. செர்பியா, கோஸ்டா ரிகா அணிகள் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியன. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் சுவிட்சர்லாந்து ஸ்வீடன் அணியுடன் மோதுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!