ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக்கோரி ஓசூர் நீதிமன்றத்தில் மனு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை இழிவாகப் பேசியதாக நடிகர் ரஜினி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓசூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ரஜினி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100 -வது நாள் போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போராட்டத்துக்கு சமூக விரோதிகள்தான் காரணம். அவர்கள் முதலில் நடத்திய தாக்குதலின் காரணமாகத்தான் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருத்து தெரிவித்தார். நடிகர் ரஜினியின் இந்தக் கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. 

இந்நிலையில், ஓசூர் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தார். முன்னதாக அவர், ஓசூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக முதலில் கீழ் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, நேற்று ஓசூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிலம்பரசன், மனுத்தாக்கல் செய்தார். அதில் நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மீண்டும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!