வெளியிடப்பட்ட நேரம்: 08:23 (28/06/2018)

கடைசி தொடர்பு:11:08 (28/06/2018)

காவல்துறை செய்த கொலைகளைப் பற்றிப் பேசுங்கள்..! ஜக்கிவாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கண்டனம்

காப்பர் உருக்காலையின் பயன்கள் குறித்துப் பேசவேண்டிய நேரம் இதுவல்ல. மக்களைக் கொலை செய்த காவல்துறை குறித்துப் பேச வேண்டிய நேரம் இது என்று சத்குருவுக்கு நடிகர் சித்தார்த் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். 

சித்தார்த்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆன்மிக குரு ஜக்கிவாசுதேவ், 'நான் ஒன்றும் காப்பர் உருக்காலை தொழில்நுட்பத்தில் வல்லுநர் கிடையாது. ஆனால், எனக்குத் தெரியும் இந்தியாவுக்கு அதிகப்படியான காப்பர் தேவைப்படுகிறது. ஒருவேளை நாம் தேவையான அளவு, காப்பர் தயாரிக்கவில்லையென்றால், கட்டாயம் சீனாவிடமிருந்துதான் வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீதான அத்துமீறல்களை சட்டப்படி அணுக வேண்டும்.

பெரிய அளவிலான தொழிலை முடக்குவது பொருளாதாரத் தற்கொலை' என்று நேற்று பதிவிட்டிருந்தார். ஜக்கிவாசுதேவின் ட்விட்டுக்கு பதிலளித்துள்ள நடிகர் சித்தார்த், 'யோகாவைத் தவிர வேறு எதைப் பற்றியும் பிரதமர் பேசமாட்டார். காப்பர் உருக்காலையின் பயன்களைப் பட்டியலிடுவதற்கு இது ஒன்றும் சிறந்த நேரம் இல்லை சத்குரு. மக்கள் காவல்துறையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குடிமக்களைச் சுடுவது கொலை. அந்தக் கொலையைப் பற்றிப் பேசுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

யோகாகுரு பாபா ராம்தேவைத் தொடர்ந்து தற்போது, ஜக்கிவாசுதேவும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.