வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (28/06/2018)

கடைசி தொடர்பு:10:12 (28/06/2018)

"அன்புமணி மாதிரி நான் ஒண்ணும் தந்தை நிழலில் வரவில்லை!" - தமிழிசை

பா.ம.க - பா.ஜ.க மோதல்தான் சமீபத்திய சென்சேஷன். படிப்பில் யார் கெட்டி.. திறமை யாருக்கு அதிகம் என்பது வரை தமிழிசை சௌந்தரராஜன், அன்புமணி ராமதாஸின் எதிர்எதிர் ட்விட்டர் கருத்துகள் ரியல் அரசியல் சேஸிங்காக அமைந்துவிட்டது. `நான் விவாதத்துக்குத் தயார்.' என சவால் விட்டிருக்கிறார் அன்புமணி.. என்ன சொல்கிறார் தமிழிசை?!.. இந்த விவகாரத்தின் அடிப்படையிலான கேள்விகளுடன் தமிழிசையை அணுகினோம்..

``உங்களுக்கும், அன்புமணிக்குமான கருத்து மோதல் எங்கிருந்து ஆரம்பித்தது?"

``நான் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு, `அன்புமணி ராமதாஸ் அவர்களின் பசுமைச் சாலை பற்றிய அறிக்கையைப் பார்த்தீங்களா?' என நெறியாளர் கேட்டார். அதற்கு நான், `பார்த்தேன். மரம் வெட்டுவதை பற்றியெல்லாம் அன்புமணி பேசலாமா?' என்ற ஒரு வாக்கியத்தை மட்டும்தான் சொன்னேன். இதில் எங்கு வன்னியர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினேன். 'மரம்வெட்டி' என்ற வார்த்தையை நான் உபயோகிக்கவே இல்லை. 

இந்த நிகழ்வுக்குப் பிறகு நான் ட்விட்டரில், `நடுவண் அரசில் தொடர்ந்து இரண்டு முறை ரயில்வே இணை அமைச்சர்களைப் பெற்ற பா.ம.க, அப்போது தர்மபுரி- மொரப்பூர் ரயில்திட்டத்தை நிறைவேற்றாமல் தற்போது ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிப்பது ஏன்?' என ட்விட் செய்தேன். 

உடனே, 'எய்ம்ஸ் கொண்டு வந்ததற்கு நான்தான் காரணம். மதுரையில் அடிக்கல் நாட்டினேன்' எனப் பல விஷயங்கள் கூறிவிட்டு 'இதுபோன்ற விஷயங்களில் பொதுஅறிவு இல்லாதவர் தேசியக்கட்சியில் மாநிலத் தலைவராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? ' என ட்விட் செய்தார் அன்புமணி. நான் மொரப்பூர் ரயில்திட்டத்தைப் பற்றி கேட்டதற்கு, அன்புமணி என்ன செய்திருக்க வேண்டும். அந்த திட்டத்தைப் பற்றி மட்டும்தானே பேசியிருக்க வேண்டும். அதைவிடுத்து, தகுதியைப் பற்றி ஏன் பேசுகிறார் அவர்.

நான் படிப்பிலும் சரி, திறமையிலும் சரி, எந்தவிதத்திலும் அன்புமணியைவிட நான் குறைந்த நபர் அல்ல. நீங்கள் உங்களுடைய கருத்தைப் பதிவு செய்யுங்கள். அதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், 'உனக்கு தகுதியிருக்கா?'என்று கேட்கக் கூடாது. என்னுடைய தகுதியை நீங்கள் முடிவு செய்யக் கூடாது. எல்லாத் தகுதியோடுதான் நீங்கள் வந்தீர்களா... இல்லை. இவர்கள் மட்டும்தான் உலகத்தில் புத்திசாலி என்பதுபோல பேசக்கூடாது. தலைவர்களுக்குத் தலைவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும். 

வெறும் 5-ம் வகுப்பு மட்டும் படித்த அரசியல் தலைவரிடம் சென்று அவர்கள் படிப்பைப் பற்றி சொல்லிக்காட்ட முடியுமா. அதுதவறு. நான் இதுவரை அதுபோன்ற வார்த்தைகளை எடுத்ததே கிடையாது. அன்புமணிக்கு உரிய பதில் தருவதற்காக, 

'என்னுடைய தகுதி பற்றி நீங்க பேச வேண்டாம். நான் என்னுடைய கடுமையான உழைப்பினால் கட்சியின் தலைவராகியிருக்கிறேன். நான் ஒண்ணும் தந்தையோட நிழலில் வரவில்லை' என ட்வீட் போட்டேன். 

உடனே, 'அய்யோ, அய்யோ' என பதிவிட்டார் அன்புமணி. 

அதற்கு, 'அய்யோ, அய்யோ போன்ற வார்த்தைகளை நான் உபயோகிக்க மாட்டேன். 'ஐயா'னு சொல்லித்தான் எனக்கு பழக்கமே ஒழிய 'அய்யோ' சொல்லி பழக்கமில்லை' என பதில் சொன்னேன். 

இப்படி மாறிமாறி ட்வீட் போட்டுக் கொண்டிருந்தோம். மறுநாள் ஜி.கே.மணி, 'வன்னியர்களோட போராட்டத்தை தமிழிசை கொச்சைப்படுத்திட்டாங்க'னு சொல்றார். நான் எங்கேயும் வன்னியர் என்ற வார்த்தையை உபயோகிக்கவேயில்லை. அப்படியிருக்கும்போது கொச்சைப்படுத்தினேன் என எப்படி அவரால் சொல்ல முடியும்?" 

தமிழிசை

``இந்த விவகாரத்தில் தொடர்ந்து உங்களது செல்போனுக்கு அழைப்புகள் வருவதாகவும், அவர்கள் மிரட்டுவதாகவும் சொல்லியிருந்தீங்களே?"

``ஆமாம். போனை எடுத்தாலே தவறான முறையில் பேசுகிறார்கள். நள்ளிரவு 3 மணிக்குக் கூட போன் வந்திருக்கிறது. தொடர்ந்து விடியற்காலையிலும் போன் வந்துகொண்டேயிருக்கிறது. கருத்து, மோதல் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என்னுடைய எண்ணை பல பேருக்கு தந்து தொடர்ந்து எனக்கு தொல்லைத் தருவதெல்லாம் எந்த விதத்தில் நியாயம். நான் அதைப்பற்றியெல்லாம் 
கவலைப்பட வில்லை. எனக்கு அரசியல் புதிதல்ல. எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்றுதான் இருக்கிறேன். பெண் தலைவர்கள் என்றால் அவர்களுக்கு இளக்காரமாக போகிறது. தலைவர்களுக்குள் நடக்கும் கருத்து மோதல்களை, கருத்து மோதல்களாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். உலகம் பார்க்கத்தானே போகிறது யார் புத்திசாலி, யார் அறிவாளி என்று!" 

``ட்விட்டரில் உங்கள் மீது வரும் விமர்சனங்களை பார்ப்பீர்களா?" 

``என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அருவருக்கத்தக்க வகையில் பல வார்த்தைகளை உபயோகித்து வருகின்றனர். இதற்கெல்லாம் நான் பதிலளிக்க ஆரம்பித்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். பிரதமர் மோடியை இவர்கள் எவ்வளவு விமர்சனம் செய்கிறார்கள். பிரதமரை, ராமதாஸ் ஒருபக்கம் விமர்சிக்கிறார், அன்புமணி ஒருபக்கம் விமர்சனம் செய்கிறார். இப்படி பிரதமரைப் பற்றி இஷ்டத்துக்குப் பேசும்போது நாங்கள் போன் செய்து திட்டிக்கொண்டா இருந்தோம்." 

`` 'நான் மெரிட்டில் எம்.பி.பி.எஸ் படித்தவன். தமிழிசை எம்.ஜி.ஆரின் பரிந்துரையில் எம்.பி.பி.எஸ் படித்தவர்' என அன்புமணி கூறியிருக்கிறாரே?"

(கேள்வியைக் கேட்டதும் கலகலவென சிரித்தவர் ) . `' இல்லை. இதெல்லாம் இவருக்கு எப்படி தெரியுமாம். அன்புமணி எம்.பி.பி.எஸ் உடன் படிப்பை நிறுத்திவிட்டார். நான் அதைத்தாண்டி நிறைய மேற்படிப்புகள் படித்திருக்கிறேன். மூன்று வெளிநாடுகளில் படித்துவிட்டு வந்திருக்கிறேன். தைரியமாகச் சொல்கிறேன் அன்புமணியிடம், நான் தந்தையின் நிழலில் வரவில்லை. ராமதாஸ் இல்லை என்றால் அன்புமணி எங்கே இருக்கிறார். ஆனால், குமரி அனந்தன் இல்லையென்றாலும் தமிழிசை நின்றிருப்பேன். என் தந்தை நிழலில் நான் அரசியலுக்கு வரவில்லை. 20 வருடங்களாக கஷ்டப்பட்டு, உழைத்து பி.ஜே.பிக்கு தலைவராகியிருக்கிறேன். அவர் இப்படி பேசியது மிகவும் தவறான விஷயம். நான் திரும்பி அவரைப் பற்றி இப்படி பேச ஆரம்பித்தால் என்ன செய்வார் அன்புமணி. அவரது அப்பா அவரைக் கொண்டுபோய் மான்ட்ஃபோர்ட் பள்ளியில் படிக்க வைத்தார். என் தந்தை பெரிய எம்.பி யாக இருந்தாலும் சாதாரண தமிழ் மீடியம் பள்ளியில்தான் படித்தேன். அதேபோல, நான் மெரிட் இல்லாமல் வரவில்லை. என்னுடைய படிப்புத் தகுதி என்னவென்று உலகத்துக்கே தெரியும்.இவர்களுக்காக நிரூபிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை."

தமிழிசை

`` 'நான் விவாதத்துக்க்கு தயார். தமிழிசை சொல்லும் தேதியில் விவாதத்தில் கலந்துகொள்கிறேன்' என அன்புமணி கூறியிருப்பது பற்றி?"

``நான் நேற்று முன்தினம் விவாதத்துக்கு அழைத்திருந்தேன். அந்தத் தேதியை விட்டுவிட்டு நேற்று, இன்று என பல பொழுதுகள் கழித்து, `நான் புத்திசாலி, இப்போது விவாதத்துக்குத் தயார்' எனச் சொல்லுவது எந்த விதத்தில் நியாயம். அதற்கு முன்பு பதிவிட்ட ட்வீட்களுக்கெல்லாம் அடுத்த நொடியே பதிலளித்த அன்புமணி, விவாதத்துக்குச் சவால் விட்டதும் ஏன் அடுத்த நிமிடமே பதில் சொல்லவில்லை. நன்றாக யோசித்து 48 மணிநேரம் கழித்து முடிவெடுப்பாரா அவர். ஆரம்பம் முதலே நிறைய தவறான விஷயங்கள் பேசிக்கொண்டு வந்திருக்கிறார் அன்புமணி. நான் இதைப் போட்டியாகவோ, காழ்ப்பு உணர்ச்சியாகவோ எடுத்துப் போக எனக்கு விருப்பம் கிடையாது. ஒரு கருத்தைச் சொன்னேன் என்பதற்காக எனது தகுதியையோ, பொது அறிவையோ பேசுவது எந்தவிதத்திலும் நியாயமாகாது. பிரச்னையை ஆரம்பித்து வைத்ததே அவர்தான். நான் எப்போதும் விவாதத்துக்குத் தயார்." 


டிரெண்டிங் @ விகடன்