வெளியிடப்பட்ட நேரம்: 08:59 (28/06/2018)

கடைசி தொடர்பு:10:03 (28/06/2018)

பெரியகுளம் கோயில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு..! புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறை

பெரியகுளம் கும்பாபிஷேகத்தில் செயின் பறித்த பெண்களின் படம் வெளியீடு.!

தேனி மாவட்டம் பெரியகுளம் வராகநதியின் தென் கரையில் அமைந்துள்ளது பெரியகோவில் எனப்படும் பாலசுப்பிரமணியர் திருக்கோவில். ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டு பல வருடங்களாக பராமரிப்பின்றிக் கிடந்த இக்கோவிலை சீரமைத்து, ராஜகோபுரம் எழுப்ப மிக முக்கிய காரணமாக இருந்தவர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 25-ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், தேனி மாவட்டத்தின் பல இடங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் புகுந்த ஒரு கும்பல் பெண்களிடமிருந்து தங்கச் செயின்களைத் திருடினர்.

இந்தச் சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்கரை காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். கோவிலைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் செயின் திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர். படத்தில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள பெண்களைப் பற்றிய விவரம் தெரிந்தால் உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.