வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (28/06/2018)

கடைசி தொடர்பு:09:26 (28/06/2018)

பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டம்..! முக்கிய விவகாரங்களுக்கு அனுமதி மறுப்பு

பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 100-வது ஆட்சிக்குழு கூட்டம் நேற்று மதியம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆட்சிமன்றக் கூடத்தில் நடைபெற்றது. இதில் பலரும் எதிர்பார்த்த முன்னாள் பதிவாளர் அங்கமுத்து மரணம், அவர் மரண வாக்குமூலம், ஆவணங்கள் மறைக்கப்பட்டது, வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களையும், மூத்தப் பேராசிரியர்கள் இருக்கும்போது இளைய பேராசிரியர்களை ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமித்தது பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மூத்த பேராசிரியர்களிடம் கேட்டபோது, ``ஆட்சிக்குழு கூட்டத்தில் உயர் கல்வித்துறைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில் நுட்பக் கல்வி இயக்குநர், சட்டத்துறைச் செயலாளர், சட்டக் கல்வி இயக்குநர் என 6 அரசுப் பிரதிநிதிகள் ஆட்சிக்குழுவின் கெளரவ உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆட்சிக்குழு கூட்டத்திலும் ஒருவர் அல்லது இருவர் கலந்துகொண்டாலே ஆட்சிக்குழுவில் இருப்பவர்களுக்கு அச்சம் ஏற்படும். பல்கலைக்கழகத்தில் எவ்விதமான தவறுகளும் நடக்காமல் தடுக்கவும் முடியும். ஆனால், ஆட்சிக்குழு கூட்டத்தில் கெளரவ உறுப்பினர்கள் ஒருவர் கூட கலந்துகொள்ளாமல் இருப்பதாலேயே பல்கலைக்கழகத்தில் பல தவறுகள் நடைபெறுகின்றன. நேற்று நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் ``பல்கலைக்கழகத்தில் உள்ள சில கறுப்பு ஆடுகள் பத்திரிகையாளர்களுக்கு கையூட்டு கொடுத்து தினந்தோறும் செய்திகளை வெளியிடுகிறார்கள்'' என்று பேசியுள்ளனர்.

அதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, ``தவறான செய்தியாக இருந்தால் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகத்துக்கு மறுப்பு அனுப்ப வேண்டியதுதானே. ஏன் அனுப்பாமல் இருக்கிறீர்கள்'' என்று கூறியதற்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் அமைதியாக இருந்து கூட்டத்தை பெயரளவுக்கு முடித்துவிட்டார்கள். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி பற்றியோ, பல்கலைக்கழகத்தின் மீது தொடர்ந்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைப் பற்றியோ வாய்ப் பேசாமல் கூட்டத்தை முடித்தது பலரையும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது'' என்றார்.