வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (28/06/2018)

கடைசி தொடர்பு:10:01 (28/06/2018)

`இலவசமாக தங்கும் வசதியுடன் படிப்பு' - திருநங்கைகளுக்காகக் கேரள அரசின் அசத்தல் திட்டம்

கேரளாவில், மூன்றாம் பாலினத்தவர்கள் கல்வி கற்பதற்காக இலவசத் தங்கும் வசதியுடன் உணவையும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக `சமன்வாயா' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

திருநங்கை

இன்றைய தலைமுறையிலும் மூன்றாம் பாலினத்தவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பது தொடர்கிறது. அவர்களுக்குத் தங்கும் விடுதிகள் அல்லது வாடகை வீட்டில் தங்குவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் முறையான வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது. கல்வியும் தடைப்படுகிறது. இந்த நிலையை மாற்றி அமைக்க கேரள அரசு முன்வந்துள்ளது. நாட்டில் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர்களுக்காக பிரத்யேகமாக `சமன்வாயா' என்ற புதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், சேர்ந்து படிக்கும் திருநங்கைகளுக்கு இலவச உணவுடன் தங்கும் விடுதி வசதி அமைத்துத் தரப்படும்.

மாநில எழுத்தறிவுத் திட்ட இயக்குநர், பி.எஸ்.ஸ்ரீகாலா கூறுகையில், ``சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் படிப்பைத் தொடர முடியாத நிலை உருவாகுகிறது. அதனால், மூன்றாம் பாலினத்தவர்களை சமூகத்தில் உயர்த்த `சமன்வாயா' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இந்தத் திட்டத்தில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்கும் விடுதி அமைத்துத் தரப்படும். மேலும், 4-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000, 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,250 உதவித்தொகையாக வழங்கப்படும். அவர்களுக்காக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்' என்றார்.