வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (28/06/2018)

கடைசி தொடர்பு:10:28 (28/06/2018)

கலைக்கப்படுகிறதா யு.ஜி.சி.? - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி-யை மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. `யு.ஜி.சி-க்குப் பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும்' எனத் தெரிவித்திருக்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

பிரகாஷ் ஜவடேகர் யு.ஜி.சி

நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் தரங்களை மேம்படுத்துவது, பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைப்பது, ஒழுங்குமுறை செய்வது, நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக பல்கலைக்கழக மானியக் குழு தொடங்கப்பட்டது. இந்நிலையில், கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. அதன்படி, மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் பல்கலைக்கழக மானியக் குழுவை மாற்றி அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், `உயர் கல்வித்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு அமைப்பை நீக்கிவிட்டு, தேசிய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பு நிறுவப்படும். இதனால், கல்வித்துறை மேம்படும். மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும். எனவே, யு.ஜி.சி-யின் சட்டம் கலைக்கப்பட்டு, உயர் கல்வி ஆணையம் அமைப்பதற்காக வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் வரைவுத் திட்டம் வெளியிடப்படும். பொதுமக்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் இந்தத் திட்டம் பற்றிய கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம். அடுத்த மாதம் ஜூலை 7-ம் தேதிக்குள் கருத்துகளைப் பதிவு செய்யவும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.