வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (28/06/2018)

கடைசி தொடர்பு:09:52 (28/06/2018)

மருத்துவம், பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு! ஜூலையில் கலந்தாய்வு

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப்  பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 

பொறியியல் தரவரிசை  

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பில் மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் பொறியியல் இடங்கள் உள்ளன. இந்தக் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தது. 

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை, இன்று வெளியிட்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். அதில், 10 பேர் 200க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில், முதல் இடத்தில் கீர்த்தனா ரவி, இரண்டாம் இடத்தில் ரித்திக் மற்றும் மூன்றாம் இடத்தை வர்ஷினி ஆகிய மாணவர்கள் பிடித்திருக்கிறார்கள். பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு வருகிற 6-ம் தேதி தொடங்குகிறது. ஆன்லைன் கலந்தாய்வுக்காக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 

இதேபோல், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் 2,593 காலி இடங்கள் உள்ளன. இந்த மாணவர் இடங்களை நிரப்புவதற்கான மருத்துவக் கலந்தாய்வு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.