``பிச்சையெடுத்துச் சாப்பிட்டுக்கோ!" - 80 வயது முதியவரைத் துரத்திவிட்ட மகன்

உழைத்து, களைத்து குறுகிப் போன உடல் கூடு. சரியாக உணவு சாப்பிட்டு பல நாள்கள் ஆகியிருக்கும் என்பதை, அவரின் கண்கள் உணர்த்தின. சமீப காலத்தில், முடி திருத்தம் செய்ததற்கோ, சவரம் செய்ததற்கோ எந்த அறிகுறியும் இல்லை. இந்த உடல் அமைப்புகளுடன் கோவை கண்ணப்ப நகரில் ஒரு முதியவர் சுற்றிக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கே பாவமாக இருந்த அந்த முதியவரை சில நல் உள்ளங்கள், ஈர நெஞ்சம் அறக்கட்டளையில் சேர்த்துவிட்டனர்.

``பிச்சையெடுத்துச் சாப்பிட்டுக்கோ!

ழைத்துக் களைத்துக் குறுகிப்போன உடல் கூடு. சரியாக உணவு சாப்பிட்டு பல நாள் ஆகியிருக்கும் என்பதை, அவரின் கண்கள் உணர்த்தின. சமீபத்தில் முடி திருத்தியதற்கோ, சவரம் செய்ததற்கோ எந்த அறிகுறியும் இல்லை. இந்த உடல் அமைப்புடன் கோவை கண்ணப்ப நகரில் ஒரு முதியவர் சுற்றிக்கொண்டிருந்தார். பார்ப்பதற்கே பாவமாக இருந்த அவரை சில நல் உள்ளங்கள் `ஈர நெஞ்சம் அறக்கட்டளை'யில் சேர்த்துவிட்டனர்.  அந்த முதியவரின் பெயர் நாகராஜ். வயது 80. ``மருமகளின் பேச்சைக் கேட்டு, என் மகனே என்னைத் துரத்திவிட்டுட்டான். ரொம்பக் காயப்படுத்திட்டாங்க" என்று உடைந்த குரலில் பேசுகிறார் நாகராஜ்.

முதியவர் - மகன்

``நான் வாட்ச்மேன் வேலை பார்த்தேன். மனைவி இறந்துட்டா. கவுண்டம்பாளையத்துல இருக்கிற பையன் வீட்ல இருந்தேன். நான் சம்பாதிச்சுக் குடுக்கலைனு சொல்லி, என்னைத் திட்டிட்டே இருப்பாங்க. ஒரு வேளைதான் சாப்பாடு போடுவாங்க. பசிக்குதுன்னு கேட்டாலும், திரும்பவும் சாப்பாடு கொடுக்க மாட்டாங்க. `நீ எங்களுக்கு என்ன பண்ண? சம்பாதிச்சுக் கொடுத்தியா? வெளியே போய் பிச்சையெடுத்துச் சாப்பிடு'னு சொல்றாங்க. எனக்கு பார்வையும் பிரச்னையா இருக்கு. ஒரு தடவைதான் மருத்துவமனைக்குக் கூட்டுப்போனாங்க. ஆபரேஷன் பண்ணிக்கலாம்னு சொன்னாலும், `நீ எக்கேடோ கெட்டு நாசமா போ'னு சொல்லிட்டாங்க. `சாகறதுக்குக்கூட காசு வெச்சுக்கோ... எங்ககிட்ட எல்லாம் காசு இல்லை. காசு குடுத்துட்டு வீட்டுக்குள்ளே வா'னு வீட்டைவிட்டுத் துரத்திவிட்டுட்டாங்க. 

ரொம்பப் புண்படுத்திட்டாங்க தம்பி. மருமகப் பேச்சைக் கேட்டு, என் பையனே என்னைக் கழுத்தப் பிடிச்சு வெளியே தள்ளிட்டான். மனசுல நிம்மதியே இல்லை. நான் திரும்பவும் அங்க போக மாட்டேன். என்னை அங்க மட்டும் அனுப்பிவைக்காதீங்க" என்று கைகள் நடுங்கியபடியே பேசி முடித்தார், அந்த 80 வயது முதியவர்.

நாகராஜ்

இவர் போன்ற பலருக்கு  இருக்கும் `ஈர நெஞ்சம் அறக்கட்டளை' நிறுவனர் மகேந்திரனிடம் பேசினோம்...

``அந்த முதியவருக்கு சர்க்கரை வியாதி இருக்கு. கால்களில் புண்கள் இருக்கின்றன. மலம் கழித்துவிட்டு, அதைச் சரியாகச் சுத்தம் செய்யக்கூட அவரால் இயவில்லை. மகனும் மருமகளும் அவரை அடிப்பதாக பெரியவர் சொல்கிறார். கண் தெரியாத ஒரு முதியவர் அப்படி என்ன கொடுமை செய்துவிடப்போகிறார்? இவர்களால் முடியாவிடில் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஹோமில் வைத்துப் பார்த்துக்கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு, அவரை அடிப்பது சரியல்ல.

அவரின் மகனிடம் தகவல் சொன்ன பிறகு இங்கே வந்தார். `பிரச்னை ஆகிடுச்சு சார். என் மனைவிக்கும் இவருக்கும் செட் ஆகவில்லை. இவரை வீட்டுக்குக் கூப்பிட்டுப் போக முடியாது. நீங்களே உங்களுக்குத் தெரிஞ்ச ஏதாவது ஹோம்ல சேர்த்துவிட்ருங்க. நான் மாசாம் மாசம் காசு கொடுத்துடுறேன்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

நமக்கு சிறுவயதில் பெற்றோர் செய்த பணிவிடைகளை அவர்கள் முதியவர்களான பிறகு நாம் செய்யப்போகிறோம் அவ்வளவுதான். ஆனால், இதையெல்லாம் இன்றைய தலைமுறையினர் மறப்பதால், பல முதியவர்கள் சாலைகளிலும் முதியோர் இல்லங்களிலும் சொல்ல முடியாத  துயரங்களுடன் நாள்களைக் கடத்திவருகின்றனர்" என்றார்.

நாகராஜ் போன்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பது இந்தச் சமூகத்துக்கு நல்ல அறிகுறி இல்லை. கற்களைவிட கடினமான இதயத்துடன் பலர் இருப்பதால்தான் இப்படிப்பட்ட சிலர் உருவாகிறார்கள். நாளை உங்களுக்கும் வயதாகும் என்பதை மட்டும் நெஞ்சில் நிறுத்திக்கொள்ளுங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!