வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (28/06/2018)

கடைசி தொடர்பு:11:01 (28/06/2018)

பத்திரிகையாசிரியர் சுஜாத் புஹாரியைக் கொன்றது பாகிஸ்தான் தீவிரவாதியா?

ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் எடிட்டர் சுஜாத் புஹாரியைக் கொலை செய்த கொலையாளிகளில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சுஜாத் புகாரி

காஷ்மீரின் முக்கிய பத்திரிகையான ரைசிங் காஷ்மீரின் எடிட்டராக இருந்தவர் சுஜாத் புஹாரி. அவர், காஷ்மீரில் நிலவும் தீவிரவாதச் செயல்களையும், அரசு அடக்குமுறைகளையும் எதிர்த்து தொடர்ந்து எழுதி வந்தார். இந்தநிலையில்,  ஜூன் 14-ம் தேதி அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். அவரது உதவியாளர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிசிடிவி காட்சிகள் மூலம் மூன்று பேரை காவல்துறையினர் அடையாளம் கண்டனர். அதில், ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த லக்‌ஷர்-இ-தொய்பா அமைப்பின் தீவிரவாதி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற இருவரும் தெற்கு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் காவல்துறை காவலிலிருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் தப்பியோடினார். அவரும் இந்தக் கொலையாளிகளில் ஒருவராக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.