கூட்டணி குறித்து வெளியான சித்தராமையாவின் 2 வீடியோக்கள்! எச்சரித்த சோனியா காந்தி

கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறாததையடுத்து காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதல்வராகவும், காங்கிரஸில் பரமேஸ்வர் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். 

கர்நாடக முன்னால் முதல்வர் சித்தராமையா

கூட்டணி ஆட்சி என்றபோதும் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பட்ஜெட் தாக்கல் போன்றவற்றில் ஜேடிஎஸ் தன்னிச்சையான ஆதிக்கம் செலுத்துவது காங்கிரஸ் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எம்.பி.பாட்டீல் போன்ற மூத்த தலைவர்கள் பலருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் வெளிப்படையாகவே தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

இந்த நிலையில், பட்ஜெட் தாக்கலில் சித்தராமையா ஆட்சியில் இருந்தபோது அறிவித்த மக்கள் நலன் சார்ந்த உயர்கல்வி வரை இலவச பஸ் பாஸ் மற்றும் இந்திரா உணவகம் போன்ற திட்டங்களுக்குப் போதுமான நிதி இல்லை என்று காரணம் காட்டித் திட்டத்தை ரத்து செய்ததால் சித்தராமையாவுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளாமல் இயற்கை சிகிச்சைப் பெறுவதாக 12 நாள் தர்மசாலாவுக்குச் சென்றுவிட்டார் சித்தராமையா. 

இயற்கை சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை கடந்த ஜூன் 27-ம் தேதி அவரது ஆதரவு அமைச்சர் இருவரும், எம்.எல்.ஏ-க்கள் 7 பேரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது சித்தராமையா, `இந்தக் கூட்டணி ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிப்பது கடினம், பாராளுமன்றத் தேர்தல் வரை என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்' என்று  பேசிய 2 வீடியோக்கள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஸ்வர், “ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை நடத்துவதற்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். மற்றவர்களின் கருத்து இதில் தேவையற்றது'' என்று தெரிவித்தார். 

இதனிடையே சித்தராமையாவின் 2 வீடியோக்கள் குறித்த புகாரை குமாரசாமி டெல்லிவரை கொண்டு சென்றதையடுத்து, சோனியா தனது அரசியல் ஆலோசகர் அகமது பாட்டீல் மூலமாக சித்தராமையாவை கடுமையாக எச்சரிக்கை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் சித்தராமையா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவது கர்நாடக காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!