வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (28/06/2018)

கடைசி தொடர்பு:14:48 (28/06/2018)

தூர் வாரப்படும் நீர்நிலைகள்... நடப்படும் பனை மரங்கள்... கரூர் மாவட்டத்துக்கு ‘ஓ’ போடலாம்!

கரூர் மாவட்டத்தை இயற்கை சூழ்ந்த மாவட்டமாகவும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள மாவட்டமாகவும் மாற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களை ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது

தூர் வாரப்படும் நீர்நிலைகள்... நடப்படும் பனை மரங்கள்... கரூர் மாவட்டத்துக்கு ‘ஓ’ போடலாம்!

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளம், குட்டை, கண்மாய், ஏரி ,பாசன வாய்க்கால்கள், சின்ன சின்ன ஆறுகளின் கரைகளை பலப்படுத்தவும் அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் செல்லவும் லட்சக்கணக்கான பனை விதைகளை விதைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது கரூர் மாவட்ட நிர்வாகம்.


 பனை மரம் கரூர்

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகள் பாய்ந்தாலும் மாவட்டத்தில் 70 சதவிகிதம் பகுதிகள் வறட்சி நிறைந்தவைதாம். வானம் பார்த்த பூமிதான். `பொட்டுத் தூத்தல் பூமியில் விழாதா?' என்று விவசாயிகள் வானம் பார்க்கும் காட்சிகள் இங்கு அனுதினமும் அரங்கேறும். இங்கு காடுகளும் வெறும் 4 சதவிகிதம் மட்டுமே. மாநிலத்திலேயே அதிக வெயில் அடிக்கும் மாவட்டமாகவும் கரூர் பதிவாகியிருக்கிறது. இதனால், கரூர் மாவட்டத்தில் கடவூர், தோகைமலை, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, க.பரமத்தில் ஒன்றியங்களில் நிலத்தடி நீர் 900 அடிக்குக் கீழே போய், மக்கள் குடிக்கக்கூட தண்ணீரின்றி தத்தளித்து வருகிறார்கள். அதனால், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க வைக்கவும் கரூர் மாவட்டத்தில் மரங்களை நட்டுப் பராமரிக்கவும் கரூர் மாவட்ட நிர்வாகம் பல திட்டங்களைச் செயல்படுத்த தொடங்கியிருக்கிறது. அவற்றில் முக்கியமான திட்டம்தான் கரூர் மாவட்டம் முழுக்க உள்ள நீர்நிலைகளின் கரைகளில் கிராமங்களுக்குப் போகும் சாலைகளில் பனை விதைகளை விதைப்பது. இதற்காக நூறு நாள் திட்டம் மற்றும் தாய்த் திட்டம் மூலம் கிராமங்களில் பணியாளர்களை முடுக்கிவிட்டு காடு கரைகளில் இருக்கும் பனை மரங்களிலிருந்து விழுந்து கிடக்கும் பனம் பழங்களைச் சேகரித்து, அவற்றைக் காய வைத்து, அதிலிருந்து பனங்கொட்டைகளைப் பிரித்தெடுத்து, அவற்றை அந்தந்தப் பகுதிகளில் விதைத்து வருகிறார்கள். கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


கலெக்டர் அன்பழகன்

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதாவிடம் பேசினோம்.

``கரூர் மாவட்டத்தை இயற்கை சூழ்ந்த மாவட்டமாகவும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள மாவட்டமாகவும் மாற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களை ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. ஓர் ஒன்றியத்துக்கு ஒரு நர்சரி என்று ஆரம்பித்து, அவற்றில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பூவரசு, வேம்பு, நாவல், கொடுக்காப்புளி, புங்கை போன்ற நாட்டு மரக்கன்றுகளைத் தயார் செய்து அவற்றை எல்லா ஊராட்சிகளுக்கும் அனுப்பி அந்தந்த ஊராட்சிகளில் உள்ள நீர்நிலைகளின் கரைகள், சாலை ஓரங்கள், காலியாகக் கிடக்கும் அரசு நிலங்களில் நடவு செய்யச் சொல்கிறோம். இன்னொருபக்கம் காடுகளில் அதிகம் முளைத்துக் கிடக்கும் கொசுக்களை விரட்டி அடிக்கும் நொச்சி மரக்கன்றுகளை வீட்டுக்கு நான்கு வழங்கி, வளர்க்கச் சொல்கிறோம். இதன்மூலம் மாவட்டம் முழுக்க டெங்கு கொசுக்களை ஒழிக்கவிருக்கிறோம். அதைத் தொடர்ந்து, நூறுநாள் வேலைத்திட்டம் மற்றும் தாய்த் திட்டம் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நீலைகளையும் தூர் வாரிக்கொண்டிருக்கிறோம். இதன்மூலம், மைனர் இர்ரிகேஷன் டேங்க் அமைக்கிறோம். அதேபோல் கிராமப் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரிகளுக்கு நீர் கொண்டு வரும் நீர் வரத்து வாய்க்கால்களை மேம்படுத்துகிறோம். அங்கே எல்லாம் செக்டேம் அமைக்கிறோம். அதன் மேலேயும் மற்ற நீர்நிலைகளின் கரைகளிலும் பனை விதைகளை விதைக்கிறோம். அதோடு கிராமப் பகுதிகளின் சாலைகளில் நாட்டு மரக்கன்றுகளை நடும்போது அதன் ஊடாகப் பனை விதைகளை ஆங்காங்கே விதைக்கிறோம். நூறுநாள் வேலைத்திட்ட ஆள்கள் மூலம் காடுகளிலிருக்கும் பனை மரங்களில் விழுந்துகிடக்கும் பனம் பழங்களை பொறுக்கி வரவைத்து அதை மூன்று வாரங்கள் காய வைத்து பனை விதைகளைத் தயார் செய்கிறோம். ஆகஸ்ட் மாதத்தில்தான் அதிக அளவில் பனம் பழங்கள் கிடைக்கும். அதோடு திருச்சி, பெரம்பலூரில் சில தனி நபர்களிடம் பனை விதைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர்களிடம் வாங்க பேசிக்கிட்டு இருக்கோம். தூத்துக்குடி பனை டெவலெப்மென்ட் போர்டில் பனை விதைகளை பர்சேஸ் பண்ண கேட்டிருக்கிறோம். கரூர் மாவட்டத்தில், `எங்கும் பனை; எதிலும் பனை' ங்கிற நிலையை உருவாக்க விரும்புகிறோம்" என்றார்.


 அன்பழகன்அடுத்து பேசிய, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், ``சும்மா நீர்நிலைகளில் பனை விதைகளை விதைப்பது என்றில்லாமல், அவை அனைத்தையும் மரமாக்குவதில் மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கையை எடுக்கும். பூமியில் விதைக்கப்படும் பனங்கொட்டை குருத்தா வெளிவருவதற்கே ஆறு மாதங்கள் ஆகும். `இப்படி ஒரு மரம் முளைத்திருக்கிறது' என்று தெரியவே ஒரு வருடம் ஆகும். 25 வருடங்களுக்குப் பிறகுதான் மரமாகி, நமக்குப் பலன் தர ஆரம்பிக்கும். பனை மரம் தமிழ்நாட்டு மாநில மரம். பனை மரத்தின் வேர் தொடங்கி ஓலை வரை அத்தனை பொருள்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. கற்பக விருட்சம் மாதிரியான மரம் பனை. இந்த மரம் அதிக வறட்சியைத் தாங்கி வளரும் மரம் என்பதால், கரூர் மாவட்டத்துக்கு ஏற்றது. அதோடு, இங்குள்ள நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும் இந்தப் பனை மரங்கள் பயன்படும். அதோடு, அழியும் நிலையும் இருக்கும் இந்தப் பனை மரங்களை கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் வளர்த்து, அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்லும் வகையில்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எங்களின் இந்த முயற்சிக்கு தன்னார்வலர்களும்,கல்லூரி நிர்வாகங்களும், இயற்கை ஆர்வலர்களும் பனை விதைகளை, நாட்டு மரக்கன்றுகளை தந்து உதவுகிறார்கள். ஊர் கூடி தேர் இழுத்து, கரூர் மாவட்டத்தைப் பசுமை பூமியாக்குவோம்" என்றார் பெருமிதமாக.
  


டிரெண்டிங் @ விகடன்