வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (28/06/2018)

கடைசி தொடர்பு:18:06 (28/06/2018)

சின்னத்திரை நடிகை நிலானிக்கு நிபந்தனை ஜாமீன்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கடுமையாக விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சின்னத்திரை நடிகை நிலானிக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

நிலானி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து காவல் உடையணிந்தபடியே சின்னத்திரை நடிகை நிலானி போலீஸாரை கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அது, சமூக வலைதளத்தில் வைரலானது. இதுதொடர்பாக வடபழனி போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, அவர் தலைமறைவாகவே இருந்தார். 

போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து அவர் குன்னூரில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. பின்னர் கடந்த ஜூன் 19-ம் தேதி நிலானி கைது செய்யப்பட்டார்.  அவரை சைதாபேட்டை நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அங்கு, தான் விளம்பரத்துக்காகவே இப்படிப் பேசியதாக நிலானி வாக்குமூலம் அளித்தார். பிறகு அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நிலானி. இந்நிலையில் இன்று அவருக்கு சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.