``கொடினியோதான் என் ஃபேவரிட்" - உலகக் கோப்பைக் கால்பந்துக்குச் சென்ற தமிழக மாணவி! | `Kuttinho is my favourite', says Lathaanya

வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (28/06/2018)

கடைசி தொடர்பு:14:56 (28/06/2018)

``கொடினியோதான் என் ஃபேவரிட்" - உலகக் கோப்பைக் கால்பந்துக்குச் சென்ற தமிழக மாணவி!

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், பந்தை எடுத்துக்கொடுப்பதற்காகத் தேர்வாகி, ரஷ்யா சென்று வந்த கோத்தகிரியைச் சேர்ந்த லதான்யாவுக்கு கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது

லதான்யா

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நடப்புச் சாம்பியன் ஜெர்மனி நடையை கட்ட, ஆரம்பத்தில் இருந்து சொதப்பிய அர்ஜென்டினா, மெஸ்ஸியின் ட்ரேட் மார்க் கோலால், அடுத்தச் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்துள்ளது.

இந்நிலையில், கோத்தகிரியைச் சேர்ந்த பள்ளி மாணவி லதான்யா ஜான், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி தொடங்கும்போது, பந்தை வீரர்களுக்கு எடுத்துக்கொடுக்கும் நிகழ்வுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதற்காக 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். பல்வேறு கட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு இந்தத் தேர்வு நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து இரண்டு பேர் தேர்வாகியிருந்தனர். அதில், கோத்தகிரியைச் சேர்ந்த லதான்யாவும் ஒருவர். பின்னர் அவர் பிரேசில் – கோஸ்டாரிகா அணிகள் விளையாடிய போட்டியின் தொடக்கத்தில் பந்தை எடுத்துக்கொடுத்துப் போட்டியைத் தொடக்கிவைத்தார்.

இதையடுத்து, லதான்யாவுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த லதான்யா, ``நான் விளையாடும்போது, 30 செகண்ட் வீடியோ எடுத்தாங்க. 1,600 பேர் அப்ளை பண்ணிருந்தாங்க. அதிலிருந்து 50 பேரை எடுத்தாங்க.  அப்பறம், டெல்லில, இந்திய அணியின் கேப்டன் சுனில் ட்ரையல்ஸ் எடுத்தாங்க. நிறைய ஜாம்பவான்களைப் பார்த்துக் கொஞ்சம் பதற்றமானேன். பிரேசில் வீரர் கொடினியோதான் என்னோட ஃபேவரிட் ப்ளேயர்" என்றார்.