'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' பட பாணியில் எடப்பாடிக்கு அளிக்கப்படும் பட்டங்கள்! | Is edappadi palanisamy expecting him to be treated like jayalalithaa?

வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (28/06/2018)

கடைசி தொடர்பு:14:34 (28/06/2018)

'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' பட பாணியில் எடப்பாடிக்கு அளிக்கப்படும் பட்டங்கள்!

'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' பட பாணியில் எடப்பாடிக்கு அளிக்கப்படும் பட்டங்கள்!

``ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, துணை முதல்வரான பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஏன்? ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதுகூட அவரது துறையைக் கவனித்துவந்தவர் பன்னீர்செல்வம். பிறகு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார் பன்னீர்செல்வம். முதல்வர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டாலும், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையையே முதல்வர் அறையாகப் பயன்படுத்தினார் பன்னீர்செல்வம். ஆனால், இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, முதல்வர் அறையைப் பயன்படுத்துவதுடன், ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அதிக பட்டங்களைச் சூடிக்கொண்ட முதல்வராக அவையில் வீற்றிருக்கிறார்'' என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

இதுகுறித்து அவர்களிடம் பேசினோம். ``பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தின் பலனால் முதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அவர் முதல்வராகப் பதவியேற்றதும், `முதல்வர் அறையைத் தயார் செய்யுங்கள்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போதே, தான் ஓர் ஆளுமைமிக்கச் சக்தி என்பதைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. அதன்பிறகு துணை முதல்வராகப் பன்னீர்செல்வம் பொறுப்பேற்றாலும், எடப்பாடியின் கையே எப்போதும் ஓங்கியிருக்குமாறு ஒவ்வொரு நேரத்திலும் பார்த்துக்கொண்டார். அதிலும், எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சிகளும் சரிக்குச்சரியாக அமர்ந்திருக்கும் சட்டசபையில், எடப்பாடியின் நடவடிக்கையைப் பார்க்கும் அ.தி.மு.க உறுப்பினர்களே இப்போது வாயடைத்துப் போகிறார்கள். தன்னை மற்றொரு ஜெயலலிதாவாகவே உருவாக்கிக்கொள்ள முனைகிறார் எடப்பாடி'' என்று சொல்லும் அவர்கள் அதற்குச் சில உதாரணங்களையும் சொல்கிறார்கள். 

``சட்டசபையில் 110-விதி என்று ஒன்று இருக்கிறது. அந்த விதியின்கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள்மீது விவாதங்கள் நடத்த முடியாது என்ற யுக்தியைச் சட்டசபையில் அதிகமாகச் செய்துகாட்டியவர் ஜெயலலிதா. அப்போது அவர் கையிலேயே ஆட்சியும், கட்சியும் என்ற நிலை இருந்ததால் மக்களும் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அதே பாணியை இப்போது எடப்பாடியும் கையில் எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒன்றிரண்டு அறிவிப்புகளை மட்டுமே 110-விதியின்கீழ் அறிவித்த எடப்பாடி பழனிசாமி, நடப்பு மானியக் கோரிக்கையில் தினமும் ஏதாவது ஓர் அறிவிப்பை 110-விதியின்கீழ் அறிவித்து ஜெயலலிதா பாலிசியை அப்படியே அமல்படுத்துகிறார். 

`110-விதியின்கீழ் அறிவிப்பை அந்தந்தத் துறையின் அமைச்சர்களே அறிவிக்கலாம். ஆனால், எதற்காக அந்த உரிமையை எடப்பாடி பறிக்கிறார்' என்று புரியாத புதிராக இருக்கிறது. அதேபோல், சட்டசபையில் அ.தி.மு.க உறுப்பினர் ஒருவர்  பேசத் தொடங்கினால் அவர் தனது தொகுதியைப் பற்றிப் பேசும் நேரத்தைக் காட்டிலும், ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசும் நேரம் அதிகமாக இருக்கும். இப்போது அதே நிலை தமிழகச் சட்டசபையில் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க உறுப்பினர்களிடம், `தன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதை நிறுத்திவிட்டு மக்கள் பிரச்னையைப் பேசுங்கள்' என்று அறிவித்துள்ளார். ஆனால், முதல்வர் எடப்பாடியோ தன்னைப் புகழ்ந்து பேசுவதை மறைமுகமாகவே ஆதரிக்கிறார். 

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அதிகப் பட்டங்களைச் சூடிக்கொண்ட முதல்வராக எடப்பாடி பழனிசாமி அவையில் வீற்றிருக்கிறார். மானிய மசோதா தொடங்கிய நேரத்திலேயே இவரை, `ஸ்டெர்லைட்டை மூடிய தங்கம் எங்கள் முதலமைச்சர் அவர்கள்' என்று புகழ்மாலை சூடுகிறார்கள். இதுதவிர, அ.தி.மு.க தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு வழங்கிய `இதயதெய்வம்' என்கிற பட்டத்தையும் எடப்பாடிக்குச் சூட்டி மகிழ்கின்றனர். இதை, உறுப்பினர் சரவணன் சூட்டி மகிழ்ந்தார். மேலும் அவரை, `கொங்கு நாட்டுத் தங்கம்' என்று கொங்குப் பகுதி எம்.எல்.ஏ-க்கள் புகழ்கின்றனர். `சேலத்துச் சிங்கம்' என்று உறுப்பினர் ஒருவர் ஏற்ற இறக்கத்தோடு புகழ்மாலை வாசித்தார். இப்படி, உறுப்பினர்கள்தாம் முதல்வருக்குப் புகழ்பாடுகிறார்கள் என்று நினைத்தால், அமைச்சர்களும் அதேபோல் புகழ்பாடுகிறார்கள். குறிப்பாக மூத்த அமைச்சர் ஒருவரே, `எங்கள் தங்கம்' என்று வாயாரப் புகழ்ந்திருக்கிறார். 

வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமாரோ அனைத்திலும் ஒருபடி மேலே சென்று பட்டங்களைப் பட்டியலிட்டுத் தனது பாசத்தைக் காட்டிவிட்டார். அவர், `இரும்புத் தேசத்தின் கரும்பு மனிதர்', `கரிகாலச் சோழன்', `குடிமராமத்துத் திட்டத்தைச் செம்மையாக நிறைவேற்றியதால் குடிமராமத்து நாயகன்', பெரிய மருது சின்னமருது போல பழனிசாமி, பன்னீரின் ஆட்சி இருக்கிறது என்பதை ஒப்பிட்டு, `மருது சகோதரர்கள்' என்று ஒரேநாளில் எண்ணற்ற பட்டங்களை வாரி வழங்கியிருக்கிறார். இதனால், ஆக்கபூர்வமான விவாதங்களுக்குச் செவிசாய்க்க வேண்டி முதல்வரும், துணை முதல்வரும் `இம்சை அரசன் 23-ம் புலிகேசி' பட பாணியில் பட்டங்கள் சூட்டுவதை மனதார ரசிக்கிறார்கள். இதைத்தான் முதல்வரும் எதிர்பார்க்கிறார் என்பதை உறுப்பினர்களும் உணர்ந்து அதற்கு ஏற்றவகையில் தங்கள் பேச்சை மாற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்'' என்றனர் அவர்கள் மிகவும் தெளிவாக.

``பசுமை வழிச் சாலை முதல் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை வரை எண்ணற்ற பிரச்னைகளைக் களைய வேண்டிய பழனிசாமி, பட்டங்கள் வாங்குவதில்தான் கவனமாக இருக்கிறார்'' என்று கமென்ட் அடிக்கிறார்கள் தி.மு.க-வினர். 


டிரெண்டிங் @ விகடன்