வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (28/06/2018)

கடைசி தொடர்பு:18:02 (28/06/2018)

`அன்புமணி எனும் நான்..?’ - தமிழிசையைக் கடுப்பாக்கிய இரண்டாண்டுப் பகை

`சி.எம் வேட்பாளர் யார் என்று சொல்லாமல் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாமே தவிர, உங்கள் முயற்சிக்குச் செவி சாய்க்க முடியாது' என உறுதியாகக் கூறிட்டார் தமிழிசை. அதுதான் மோதலுக்கான தொடக்கப்புள்ளி என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள்.

`அன்புமணி எனும் நான்..?’ - தமிழிசையைக் கடுப்பாக்கிய இரண்டாண்டுப் பகை

ய்ம்ஸ் மருத்துவமனையை முன்வைத்து தமிழிசையும் அன்புமணியும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். `இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் உள்மோதலின் விளைவாகவே, தமிழிசைக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்தார் அன்புமணி. இந்த மோதலை மருத்துவர் ராமதாஸ் ரசிக்கவில்லை' என்கின்றனர் பா.ம.க வட்டாரத்தில். 

மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்தது யார் என பா.ஜ.கவுக்கும் பா.ம.கவுக்கும் இடையில் மோதல் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக, `தலைவராக இருக்க அவருக்குத் தகுதியிருக்கிறதா?' என விமர்சித்தார் அன்புமணி. இதனால் கொதிப்படைந்த தமிழிசை, `எனக்குத் தலைவராக இருக்க தகுதி இருக்கின்றதா எனக் கேட்கிறார். தான் மட்டும் அதிபுத்திசாலி, வேறு எந்தக் கட்சியிலும் புத்திசாலிகள் இல்லை என அவர் நினைக்கிறார். 20 ஆண்டுகால கடின உழைப்பு, அறிவாற்றல், தேசியப் பண்பு இருப்பதால்தான் தேசியக் கட்சியின் தலைவராக வந்திருக்கிறேன். தகுதியில்லாமல் வரவில்லை. அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்த நிழலில் நான் தலைவராக வரவில்லை. சுய உழைப்பில் தலைவராக வந்திருக்கிறேன். யார் அறிவாளி என என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா?' என்றார். இதற்கு நேற்று சேலத்தில் பதிலளித்த அன்புமணி, `நான் மெரிட்டில் எம்.பி.பி.எஸ் படித்தேன். தமிழிசையின் தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பரிந்துரை பெற்றதன் அடிப்படையிலேயே தமிழிசை எம்.பி.பி.எஸ் படித்தார். அதனால் அவர்தான் அறிவாளி. அவர் அறிவாளி என்பதை நானே ஒத்துக்கொள்கிறேன். யார் அறிவாளி என விவாதம் நடத்தவும் நான் தயார்' என்றார் ஆவேசத்துடன். 

தமிழிசை

இதற்குப் பதில் அளித்த தமிழிசை, `படிப்பிலும் சரி, திறமையிலும் சரி, எந்தவிதத்திலும் அன்புமணியைவிட நான் குறைந்த நபர் அல்ல. நீங்கள் உங்களுடைய கருத்தைப் பதிவு செய்யுங்கள். அதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், `உனக்குத் தகுதியிருக்கா?'என்று கேட்கக் கூடாது. என்னுடைய தகுதியை நீங்கள் முடிவு செய்யக் கூடாது. எல்லாத் தகுதியோடுதான் நீங்கள் வந்தீர்களா... இல்லை. இவர்கள் மட்டும்தான் உலகத்தில் புத்திசாலி என்பதுபோல பேசக் கூடாது. தலைவர்களுக்குத் தலைவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும். நான் மொரப்பூர் ரயில்திட்டத்தைப் பற்றி கேட்டதற்கு, அன்புமணி என்ன செய்திருக்க வேண்டும். அந்தத் திட்டத்தைப் பற்றி மட்டும்தானே பேசியிருக்க வேண்டும். அதைவிடுத்து, தகுதியைப் பற்றி ஏன் பேசுகிறார் அவர்?' என்றார். 

அன்புமணிஅன்புமணி, தமிழிசை மோதல் என்பது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதை பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விரும்பவில்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ம.க மூத்த நிர்வாகி ஒருவர், ``கருத்துரீதியான இந்த மோதலை அவசியமற்றதாகத்தான் பார்க்கிறோம். இதே நிலைப்பாட்டில்தான் மருத்துவர் ராமதாஸும் இருக்கிறார். இனி வரக்கூடிய எந்தத் தேர்தலிலும் தி.மு.க, அ.தி.மு.கவோடு பா.ம.க கூட்டணி சேரப் போவதில்லை. இந்த இரண்டு கட்சிகளுக்கு எதிராகத்தான் அரசியல் செய்து வருகிறோம். இப்போது பா.ம.கவுக்குள்ள ஒரே வாய்ப்பு காங்கிரஸ் மட்டும்தான். தி.மு.க அல்லாத காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தாலும், பா.ம.கவை அவர்கள் சிறிய கட்சியாகத்தான் பார்ப்பார்கள்.

காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஐந்தரை சதவிகித வாக்குகளைப் பெற்றபோது, காங்கிரஸ் கட்சி எட்டுச் சதவிகித வாக்குகளைப் பெற்றது. எங்களைவிட அதிகச் சதவிகித ஓட்டுகளை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. பா.ஜ.கவுடன் கூட்டணிக்கான வாய்ப்பு பா.ம.கவுக்கு வந்து சேர்ந்தால், அதைவைத்து காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் பேச முடியும் எனக் கணக்குப் போடுகிறார் ராமதாஸ். தற்போதைய மோதலின் மூலம் அதற்கான வாய்ப்புகளை அன்புமணி உடைத்துவிட்டதாகவே அவர் நினைக்கிறார். `பா.ஜ.கவோடு மோதுவதால், பிற சமூகங்களின் விரோதத்தையும் நாம் சம்பாதித்துவிட்டோம்' எனவும் கவலைப்படுகிறார் மருத்துவர்" என்றார் விரிவாக. 

`எய்ம்ஸை முன்னிறுத்தித்தான் இந்த மோதலா?' என்ற கேள்வியை பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``இல்லை. இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் உள்பகையின் நீட்சியாகவே இந்த மோதல் வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் அன்புமணி அவசரப்பட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க, அண்ணா தி.மு.கவைத் தவிர்த்துவிட்டுத் தனியாகக் களமிறங்கினார் ராமதாஸ். `மாற்றம்-முன்னேற்றம்-அன்புமணி' என்ற முழக்கத்தையும் `அன்புமணி என்னும் நான்' என முதல்வராகவே அவர் பதவிப் பிரமாணம் எடுக்கும் சுவரொட்டிகளும் மாநிலம் முழுக்க விளம்பரப்படுத்தப்பட்டன. தனித்துப் போட்டியிட்டுக் கிடைக்கும் வாய்ப்புகளைவிட, கூட்டணிக்குள் பா.ஜ.கவை இணைத்துக்கொள்ள விரும்பினார் அன்புமணி. இதன்பிறகு, `தன்னை முதலமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க தலைவர்கள் அறிவிக்க வேண்டும்' எனவும் நினைத்தார். இதுகுறித்துத் தமிழிசையிடம் அவர் விரிவாக விவாதித்தார். இதற்குப் பதில் அளித்த தமிழிசை, `பா.ஜ.கவை ஆதரிக்கக் கூடிய நாடார்களும் வேளாளக் கவுண்டர்களும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பா.ம.கவை ஆதரிக்கக் கூடியவர்கள் மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதில் ஒரு பிரிவைச் சேர்ந்தவரை முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிப்பது சரியாக வராது. இல்லாவிட்டால், பா.ம.கவை பா.ஜ.கவுடன் இணைத்துவிடுங்கள். உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிடுகிறோம். இதற்கு நீங்கள் விருப்பம் தெரிவிக்கவில்லையென்றால், சி.எம் வேட்பாளர் யார் என்று சொல்லாமல் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாமே தவிர, உங்கள் முயற்சிக்குச் செவி சாய்க்க முடியாது' என உறுதியாகக் கூறிட்டார். தமிழிசை இப்படியொரு கோரிக்கையை முன்வைத்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது.  

அதாவது, `முதலமைச்சர் வேட்பாளர் என்ற இமேஜ், பா.ஜ.க மூலமாக தனக்குத்தான் வர வேண்டும்' என அவர் நினைத்தார். அதனால்தான் அன்புமணியின் கோரிக்கையை நிராகரித்தார். `அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால், 10 சதவிகித வாக்குகளை வாங்கக் கூடிய சூழல் உருவாகியிருக்கும். அதன்மூலம், பொதுத்தளத்தில் அன்புமணியின் இமேஜ் உயர்ந்திருக்கும்' என்பதுதான் ராமதாஸின் எண்ணமாக இருந்தது. `பொதுத்தளத்தில் அன்புமணியின் இமேஜ் உயர்வதால் பா.ஜ.கவுக்கு என்ன லாபம்?' எனத் தமிழிசை கணக்குப் போட்டார். அந்தக் கோபம் இன்றளவும் அன்புமணிக்கு இருக்கிறது. தற்போது தமிழிசைக்கு எதிராக பா.ஜ.கவின் உள்கட்சிக்குள்ளேயே சில கோஷ்டிகள் செயல்படுகின்றன. இந்தநேரத்தில் விமர்சித்தால், தமிழிசையின் வலிமை குறையும் என நினைத்தார் அன்புமணி. `2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணியை முன்னிலைப்படுத்த முடியாது' எனத் தமிழிசை கூறியதும் தற்போது எய்ம்ஸ் குறித்து உருவான மோதலும் இந்தப் பின்னணியின் அடிப்படையில்தான்" என்றார் விரிவாக.