தர வரிசைப் பட்டியல்: பொறியியலில் கோவை கீர்த்தனா...மருத்துவத்தில் சென்னை கீர்த்தனா முதலிடம்

தர வரிசைப் பட்டியல்: பொறியியலில் கோவை கீர்த்தனா...மருத்துவத்தில் சென்னை கீர்த்தனா முதலிடம்

மருத்துவம் மற்றும் பொறியியல் கலந்தாய்வுக்கான தர வரிசைப் பட்டியல் இன்று (28.06.2018) வெளியிடப்பட்டது. இதில், பொறியியல் கலந்தாய்வு தர வரிசையில் கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனாவும், மருத்துவப் படிப்புக்கான தர வரிசையில் சென்னையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனாவும் முதலிடம் பிடித்துள்ளனர். 

தரவரிசைப் பட்டியல்

பொறியியல் கலந்தாய்வுக்கான தர வரிசைப் பட்டியல், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும், மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான தர வரிசைப் பட்டியல், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையிலும் வெளியிடப்பட்டது. பொறியியல் கலந்தாய்வில் முதல் 10 இடங்களில் கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனாவும், மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் சென்னையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனாவும் முதலிடம் பிடித்துள்ளனர்.

தரவரிசைப் பட்டியல்

பொறியியல் தர வரிசைப் பட்டியல் www.tnea.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முதல் 10 பேர் 200/200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில், கோவையைச் சேர்ந்த மாணவர்கள் முதலாவது இடத்தையும், நான்காவது இடத்தையும் பெற்றுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ரீத்விக் இரண்டாவது இடத்தையும், திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீவர்ஷினி மூன்றாவது இடத்தையும், கோவையைச் சேர்ந்த அர்ஜூன் அசோக், புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த சுஜாதா, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த யமுனாஸ்ரீ, திருவள்ளூர் மாவட்டம் நிஷா, தஞ்சாவூர் மாவட்டம் நிதிஷ் குமார், திருவள்ளூர் மாவட்டம் மணிகண்டன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களில் சென்னையைச் சேர்ந்த எந்த மாணவரும் இடம்பிடிக்கவில்லை. 

மருத்துவக் கலந்தாய்வில் இரண்டாவது இடத்தை தருமபுரியைச் சேர்ந்த ராஜ் செந்தூர் அபிசேக், சென்னையைச் சேர்ந்த பிரவீன், முகமது சாகீப் ஹாசன், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகவேந்திரன், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த், திருச்சி மாவட்டம் ஹரி நரேந்திரன், திருநெல்வேலி மாவட்டம் ஆர்த்தி சக்தி பாலா, சென்னை யந்தூரி ரூத்விக், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரவி பாரதி ஆகியோர் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளனர். இதில், சென்னைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர். பொறியியல் படிப்புக்கான பட்டியலில் முதல் 10 இடங்களை கோவை, ஈரோடு, சேலம் போன்ற வட மாவட்டங்களைச் சார்ந்தவர்கள்  அதிக அளவிலும், மருத்துவப் படிப்பில் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் அதிக அளவிலும் இடம் பிடித்துள்ளனர்.

தரவரிசைப் பட்டியல் முதல் இடம் கீர்த்தனா

மருத்துவக் கலந்தாய்வு தர வரிசையில் முதலிடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா, ஜிப்மர் மருத்துவ நுழைவுத்தேர்வில் ஐந்தாவது இடத்தையும், நீட் தேர்வில் அகில இந்திய அளவில் பன்னிரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தார்.  அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத் (எய்ம்ஸ்) தேர்வில் 31-வது ரேங்க் பெற்றுள்ளார். இவரிடம் பேசியபோது, ``தமிழக அளவில் முதலிடம் பிடித்திருந்தாலும், அடுத்த வாரம் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர இருக்கிறேன்" என்றார்.

பொறியியல் படிப்பில் முதலிடம் பிடித்த கீர்த்தனாவிடம் பேசியபோது, ``பொறியியல் கலந்தாய்வில் முதலிடம் பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அடுத்த வாரம் கனடாவில் நடக்கும் உலக சமஸ்கிருத மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதன்பின்பே, பொறியியல் படிப்பில் சேர்வதுகுறித்து முடிவெடுக்க உள்ளேன்" என்றார்.  இவர், ஏற்கெனவே டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி வேதியியல் படிப்பில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!