உள்ளாட்சித் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் நீட்டித்தது தமிழக அரசு!

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து இன்று சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சட்டமன்றம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. பின்னர், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சிக்கும் தனி அலுவலர்களை நியமித்து, 2016-ம் ஆண்டே உத்தரவிட்டது அரசு. முதலில், இவர்களின் பதவிக்காலம் 6 மாதமாக அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சித்தேர்தல் தொடர்ந்து நடத்தப்படாமல் இருப்பதால், தனி அலுவலர்களின் பதவிக்காலம் 4 முறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து அமைச்சர் எஸ்.வி.வேலுமணி மசோதா தாக்கல்செய்தார். இதற்கு, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். கொசுத் தொல்லை, பாதாளச் சாக்கடை போன்றவற்றை தனி அதிகாரிகளால் சரிசெய்ய முடியாது. உடனடியாக உள்ளாட்சித்தேர்தலை நடத்தி, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதே இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்” எனக் கூறினார். இதையே காங்கிரஸ் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டதால், இன்றே இதற்கான சிறப்புப் கூட்டத்தைக் கூட்டி  விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!