`தமிழகத்தில் தமிழிசை நடமாட முடியாது’ - ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க-வினர் ஆவேசம் | PMK cadres slams Tamilisai

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (28/06/2018)

கடைசி தொடர்பு:17:00 (28/06/2018)

`தமிழகத்தில் தமிழிசை நடமாட முடியாது’ - ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க-வினர் ஆவேசம்

தமிழிசையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

``ராமதாஸிடம் பகிரங்கமாகத் தமிழிசை மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரை தமிழகத்தில் எங்கேயும் நடமாட விட மாட்டோம்'' என்று ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க-வினர் ஆவேசத்துடன் பேசினர்.

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையைக் கண்டித்து பா.ம.க-வினர் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலாளர் அருள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும்  மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பா.ம.க-வின் மாநிலப் பொதுச் செயலாளர் அருள், ''ராமதாஸ் தலைமையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடி 21 பேர் உயிர் நீத்தார்கள். இந்தப் போராட்டத்தை தமிழிசை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். இதை நாங்கள் அனைவரும் வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் 108 சாதியினர் இடஒதுக்கீடு பெற்று அவர்களுடைய குழந்தைகள் இன்று உயர் கல்வி படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 15 நாள்களாகத் தொடர்ந்து தமிழிசை, ராமதாஸையும் அன்புமணியையும் இழிவுபடுத்தி பேசி வருகிறார். அரசியல் நாகரிகத்தை அவருடைய தந்தை குமரி அனந்தனிடம் தமிழிசை கற்றுக்கொள்ள வேண்டும். இறுதியாக ஒன்றை தமிழிசைக்கு சொல்லிக் கொள்கிறோம். ராமதாஸிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் தமிழிசையைத் தமிழகத்தில் எங்கேயும் நடமாட விட மாட்டோம்.

தமிழிசை பன்னிரண்டாம் வகுப்பில் வெறும் 700 மதிப்பெண் வாங்கி அவருடைய தந்தை மூலம் எம்.ஜி.ஆரிடம் சிபாரிசு பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், எங்க அன்புமணி சேலம் மான்ஃபோர்ட் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 1163 மதிப்பெண்கள் எடுத்து எம்.ஆர்.ஜி மருத்துவக் கல்லூரியில் இலவசமாக சீட் கிடைத்தது. முதல்வராகத் தகுதியுடைய அன்புமணியை இழிவுபடுத்தி பேசி வரும் தமிழிசை நாவடக்கத்தோடு பேச வேண்டும். மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் தமிழகத்தில் எங்கேயும் நடமாட முடியாது'' என்றார் ஆவேசத்துடன்.