வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (28/06/2018)

கடைசி தொடர்பு:16:53 (28/06/2018)

ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காதது ஏன்?

சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்புக் குழுவில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளைத் தனக்குத் தெரியாமல், நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் பணியிடை மாற்றம் செய்கிறார்கள்.

ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காதது ஏன்?

`நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்த, தமிழக அரசு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை’’ என்று புகார் தெரிவித்திருக்கிறார் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன்னிலையில், நேற்று நடந்த விசாரணையின்போது இப்படிச் சொல்லியிருக்கிறார். மேலும், சிலைகளைப் பாதுகாக்க அறைகள் அமைப்பது தொடர்பாக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை; சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்புக் குழுவில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளைத் தனக்குத் தெரியாமல், நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் பணியிடை மாற்றம் செய்கிறார்கள் என்பது அவர் அளித்திருக்கும் புகார்கள்.

சிலை மீட்பு

வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ``ஜூலை 11-ம் தேதிக்குள் கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும்’’ என்று எச்சரித்திருக்கிறார். அதேபோல, ``நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை, நீதிமன்றத்தின் அனுமதியின்றி பணியிடை மாற்றம் செய்வது கண்டனத்துக்குரியது. தொடர்ந்து இதுபோலச் செயல்பட்டால் டி.ஜி.பி நேரில் ஆஜராக நேரிடும்’’ என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பிறகு, இந்த வழக்கு விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருபவர் பொன்.மாணிக்கவேல். இவர் தலைமையிலான குழு, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டிருக்கிறது. பல சிலை திருட்டுகளையும் தடுத்திருக்கிறது. சிலைக் கடத்தல் பிரிவில் 33 வழக்குகளும், தமிழகம் முழுவதும் 455 வழக்குகளும் பதிவாகின. இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் அவரை ரயில்வே ஐ.ஜி-யாகப் பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. ஆனால், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்தவந்த நீதிபதி மகாதேவன், `சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுதான் விசாரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அதன் காரணமாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவையும் கூடுதலாகக் கவனித்துக்கொண்டார் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது தமிழ்நாடு அரசு. ஆனால் அங்கேயும், `நீதிபதி மகாதேவனின் உத்தரவு சரிதான்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொன்மாணிக்கவேல்

மீண்டும் தனது அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கினார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல். மாமன்னர் ராஜராஜன் - உலகமாதேவி சிலைகளை குஜராத்திலிருக்கும் சாராபாய் தனியார் அருங்காட்சியகத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். பழனி கோயில், உற்சவர் சிலையில் மோசடி நடந்ததையும் இவர் தலைமையிலான குழு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.யானை ராஜேந்திரன்

அதற்குப் பின்னர், பல தரப்புகளிலிருந்து அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சரியாக ஒத்துழைப்புக் கொடுப்பதில்லையென்றும் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில்தான் நேற்று நீதிபதியின் முன்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் அவர். இது குறித்து கருத்து கேட்பதற்காக அவரைப் பலமுறை செல்போனில் தொடர்புகொண்டோம். அவர் அழைப்பை எடுக்கவில்லை.

இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்து தன்னை இணைத்துக்கொண்டவரும், வழக்கறிஞருமான யானை ராஜேந்திரனிடம் இது குறித்துப் பேசினோம்...

``இந்த வழக்கில் முக்கியமான பலர் சிக்கியிருக்கிறார்கள். தீவிரமாக விசாரித்தால், அனைவரும் வெளிச்சத்துக்கு வந்துவிடுவார்கள். அதற்கு பயந்துதான் பல தரப்பிலிருந்தும் அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. அவர் அதற்கெல்லாம் பயப்படாமல், கட்டுப்படாமல் செயல்பட்டுவருகிறார். அவர், வருகிற நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெற இருக்கிறார். அதனால் இப்படியே இழுத்தடித்து, இந்த வழக்குகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். சிலைகளின் உள்ளேயிருக்கும் உலோகங்களைக் கண்டறியும் இயந்திரத்தை வாங்கச் சொல்லி, இந்து சமய அறநிலையத்துறையிடம் கேட்டிருந்தார். `பணம் இல்லை’ என்று இழுத்தடித்தார்கள்; அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாகக் காரணம் சொன்னார்கள்.

சிலை

அந்த இயந்திரத்தின் விலை வெறும் இருபது லட்ச ரூபாய்தான். இதை வாங்கப் பணமில்லை என்பவர்கள், திருக்கண்ணபுரம் கோயிலுக்கு இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். மாங்காடு அம்மன் கோயிலுக்கு கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் பல லட்ச ரூபாய் பெருமானமுள்ள ஆடி கார். இதற்கெல்லாம் பணம் இருக்கும்போது, உலோகங்களைக் கண்டறியும் கருவி வாங்க மட்டும் பணம் இல்லையா? இது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, டி,ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு நீதிமன்றத்தை அவமதித்ததாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன். நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளை பணம் கொடுத்து, பதவி கொடுத்து மடக்கப் பார்க்கிறார்கள். முடியாவிட்டால், இப்படி நெருக்கடிகள் கொடுக்கிறார்கள்’’ என்கிறார் யானை ராஜேந்திரன்.டி.ஆர்.ரமேஷ்

ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் இது குறித்துப் டி.ஆர்.ரமேஷிடம் பேசினோம்...

``சிலைக் கடத்தல் தொடர்பாக ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் அவரை வேறு துறைக்கு டிரான்ஸ்ஃபர் செய்தார்கள். நீதிமன்றம் அவரைச் சிலைக் கடத்தல் தொடர்பாக மட்டும் விசாரிக்கச் சொல்லவில்லை. கோயில்களிலுள்ள விலை உயர்ந்த ஆபரணங்கள் குறித்தும் விசாரிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்திருந்தது. ஆபரணங்களில் மோசடி நடைபெற்றிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அது குறித்து விசாரித்தால், பலர் சிக்கிக்கொள்வார்கள். ஒருவேளை இது வெளியில் தெரிந்தால், அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், அரசாங்கம் ஒத்துழைப்புக் கொடுக்காமல் இருக்கலாம்’’ என்கிறார் டி.ஆர்.ரமேஷ்.

ராஜராஜன் சிலை

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரும், தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசனிடம் இதுகுறித்துப் பேசினோம்...மணியரசன்

`` அரிய கலைக் கருவூலங்களாக விளங்கக்கூடிய சிலைகளையெல்லாம் வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் விற்று இத்தனை ஆண்டு காலம் லாபமடைந்திருக்கிறார்கள். ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் அதற்குத் தடையாக இருக்கிறார். அவர் புலனாய்வு செய்து விசாரித்த தகவல்களை அவருக்கு மூத்த அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவரை நிர்பந்திக்கிறார்கள். அரசியல் பிரமுகர்களுக்கு இந்த மோசடிகளில் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் அவரிடமிருந்து தகவல்களைப் பெற்று காப்பாற்ற நினைக்கிறார்கள். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அவர், நீதிமன்றத்தில்தான் அந்தத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டுமே தவிர, அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசு, அவருக்கு மேலும் ஊக்கத்தை அளித்து, அவரை உற்சாகப்படுத்தவேண்டும். அவரை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அவரைப் பணியிலிருந்து விடுவித்துவிட வேண்டும் என்று நினைக்கக் கூடாது’’ என்கிறார் மணியரசன்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்