மாட்டுவண்டித் தொழிலாளர்களால் 1 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து!

விருத்தாசலம் அருகே, மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க  மாட்டுவண்டியுடன் தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தில், வெள்ளாற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி இயங்கிவந்தது. இந்த மணல் குவாரி, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மூடப்பட்டது. இதனால், நெய்வாசலைச் சுற்றியுள்ள தொளார், ஆதமங்கலம், கொடிகலம், பட்டூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாட்டுவண்டித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் மாட்டுவண்டி மணல்குவாரி அமைக்கக் கோரி, வருவாய்த்துறை, பொதுப் பணித்துறையினரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாட்டு வண்டி தொழிலாளர்கள் மறியல்- போக்குவரத்து ஸ்தம்பிப்பு

இந்நிலையில் இன்று, மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாட்டுவண்டித் தொழிலாளர்கள் ஜீவா மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்கம் தலைமையில், மீண்டும் மாட்டுவண்டி மணல்குவாரி அமைக்கக் கோரி, விருத்தாசலம்- திட்டக்குடி சாலையில் பொன்னேரி கிராமத்தில் மாட்டுவண்டிகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், விருத்தாசலம்-திட்டக்குடி சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி வட்டாட்சியர் சிவக்குமார், திட்டக்குடி டிஎஸ்பி., வெங்கடேசன் ஆகியோர், சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி,  மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறியவுடன், தொழிலாளர்கள் தங்கள் மாட்டுவண்டியுடன் கலைந்துசென்றனர். இந்த மறியலால் விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!