`தகுதி இல்லாதவர்களுக்குக் கடன் கொடுக்காமலிருப்பதே நல்லது’ - வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை!

'திருப்பிச்செலுத்தும் தகுதி இல்லாதவர்களுக்குக் கடன் கொடுக்காமலிருப்பதே நல்லது' என சென்னை உயர் நீதிமன்றம் வங்கிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றம்

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி தீபிகா என்ற நர்சிங் மாணவி, தனக்கு வங்கியில் கடன் கிடைக்கவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.  இந்த வழக்கு,  நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் தந்தை ஏற்கெனவே வங்கி ஒன்றில் கடன் வாங்கி செலுத்தாமல் இருப்பதை வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து  நீதிபதி வைத்தியநாதன், `மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடனை திருப்பிச்செலுத்த பெற்றோர்களுக்குத் தகுதி உள்ளதா என்பதை ஆராய்ந்தே, அவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும். அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக, பலருக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. அந்த நபர்கள், வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்கின்றனர். இதனால், அப்பாவி ஊழியர்கள்தான் கடைசியில் பாதிக்கப்படுகின்றனர். கடன் சிறியதோ பெரியதோ அதை வசூலித்தாக வேண்டும். கடனைப் பெற்றுவிட்டு திருப்பிச்செலுத்தாமல் இருப்பவர்கள் பின்னால் ஓடுவதை விடுத்து, திருப்பிச்செலுத்தத் தகுதி இல்லாதவர்களின் விண்ணப்பங்களை ஆரம்பத்திலே நிராகரிப்பதே நல்லது’ என வங்கிகளுக்கு அறிவுறுத்திய நீதிபதி, கல்விக்கடன் கோரிய மனுவை வங்கி நிராகரித்தது சரி என்று கூறி, தீபிகாவின் மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!