`சிசிடிவி அகற்றப்பட்டது எனக்குத் தெரியாது’ - ஜெயலலிதா சிகிச்சை குறித்து உளவுத்துறை ஐ.ஜி வாக்குமூலம்! | I don't know about why cctv camera's removed when jayalalitha admitted in apollo says IG sathyamoorthy

வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (28/06/2018)

கடைசி தொடர்பு:21:02 (28/06/2018)

`சிசிடிவி அகற்றப்பட்டது எனக்குத் தெரியாது’ - ஜெயலலிதா சிகிச்சை குறித்து உளவுத்துறை ஐ.ஜி வாக்குமூலம்!

அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சிசிடிவி அகற்றப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது என உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினருக்கு ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆணையத்துக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது, பாதுகாப்பு வழங்கிய உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தியை ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து இன்று அவர் ஆஜராகி விசாரணை ஆணையத்தில் விளக்கமளித்தார். அப்போது ``75 நாள்களில் ஜெயலலிதாவை யார் யார் பார்த்தார்கள் என்ற டைரி குறிப்புகள் பராமரிக்கப்படவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சிசிடிவி அகற்றப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது" என அவர் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனிடையே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தரப்பில் அப்பலோ மருத்துவமனையில் ஆய்வு செய்வது தொடர்பாக, அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர்கள் இருவர் ஆணையத்துக்கு இன்று நேரில் சென்று, தங்களது தரப்பு விளக்கம் அளித்தனர். முதலில்  ஆய்வு செய்வதற்கு மருத்துவமனை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், கட்டாயம் ஆய்வு செய்யப்படும் என ஆணையம் தெரிவித்ததையடுத்து ஆணையத்தின் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஆய்வு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. சசிகலா தரப்பு வழக்கறிஞர்களும் ஆய்வுக்கு வரவுள்ளனர். தொடர்ந்து, ஆய்வின்போது செய்தியாளர்கள் தங்களை அனுமதிக்க வேண்டும் என விண்ணப்ப மனு ஆணையத்தில் அளிக்கப்பட்டிருப்பது தொடர்பாகக் கேட்டபோது, அவர்களை அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close