வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (28/06/2018)

கடைசி தொடர்பு:21:40 (28/06/2018)

`விரைவில் நல்ல செய்தி வரும்' - வர்த்தகத் துறைமுகம்குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் சூசகம்!

கன்னியாகுமரியில், வர்த்தகத் துறைமுகத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா விரைவில் இருக்கும் என்பதை குறிப்பிடும் விதமாக, 'வர்த்தகத் துறைமுகம் அமைப்பதுகுறித்த நல்ல செய்தி விரைவில் வரும்' என கல்லூரி விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ன்னியாகுமரியில், வர்த்தக துறைமுகத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா விரைவில் இருக்கும் என்பதை குறிப்பிடும் விதமாக 'வர்த்தக துறைமுகம் அமைப்பதுகுறித்த நல்ல செய்தி விரைவில் வரும்' என கல்லூரி விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொன் ராதாகிருஷ்ணன்

125-வது ஆண்டுவிழா காணும் நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரியின் தபால்தலை வெளியிடும் விழா இன்று நடந்தது. இதில் மத்திய தபால்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கலந்துகொண்டு தபால்தலையை வெளியிட்டார். விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "சாதாரணமாக தபால்தலை வெளியிட வேண்டுமானால், அதற்கான நடவடிக்கைகளுக்கு 6 மாதங்கள் ஆகும். அதன்பிறகு, ஓர் ஆண்டுக்குள் வெளியிட முயற்சிப்பார்கள். நான் இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவன் என்பதால் தபால்தலை வெளியிடும் முயற்சியில் இறங்கினேன். நான் படித்த கல்லூரி என்பதால், அமைச்சர் மனோஜ் சின்ஹா தபால்தலை வெளியிட முழு ஒத்துழைப்பு வழங்கினார்.

பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறேன். நான் பாராளுமன்ற உறுப்பினர் ஆனதும், தமிழக அரசு பராமரிக்கவேண்டிய 124 மாநில, மாவட்ட சாலைகள் 1000 கோடி ரூபாய் செலவில் செப்பனிடப்பட்டன. மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. தென்னிந்திய மேம்பாலங்களில் முதல் நிலை மேம்பாலங்களாக இவை அமையும். மேலும் கோட்டாறு, ஒழுகினசேரியில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 3000 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுவருகிறது. நான்குவழிச்சாலை அமைக்கப்படும்போது மேம்பாலங்கள் எதற்கு என சிலர் கேட்கிறார்கள். மேம்பாலம் அமைக்காமல் இருந்தால், இந்தப் பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாத இடமாக மாறிவிடும்.

பொன் ராதாகிருஷ்ணன்

புதிய நான்குவழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும்போது, கட்டணம் இல்லாமல் இந்த மேம்பாலங்கள் வழியாகப் பயணிக்கலாம். சென்னை - கன்னியாகுமரி, கன்னியாகுமரி- திருவனந்தபுரத்துற்கு இரட்டை ரயில்பாதை மற்றும் மின்மயமாக்கப்பட்ட பாதைக்கான பணிகள் நடந்துவருகின்றன. இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் வந்தே ஆகவேண்டும். நீங்கள் வேறு மாவட்டங்களிலும், வேறு மாநிலங்களிலும் வேலைக்குச் செல்லும் நிலை மாறும். அதிலும் நீங்கள் வேலை செய்பவராக இல்லாமல், தொழில் செய்பவர்களாக மாறி, பிறருக்கு பணி வழங்க வேண்டும். வர்த்தகத் துறைமுகம் அமைப்பதுகுறித்த நல்ல செய்தி விரைவில் வரும். இந்த மாவட்டம் இந்தியாவில் முதல்நிலை மாவட்டமாக வரவேண்டும். தென் தமிழ்நாடு, தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவில் நம்பர் ஒன் மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் வரவேண்டும்" என்றார்.