வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (29/06/2018)

கடைசி தொடர்பு:03:30 (29/06/2018)

மாநில அளவிலான மகளிர் ஐவர் கால்பந்துப் போட்டி - அசத்திய அரசுப் பள்ளி மாணவிகள்!

மாநில அளவிலான மகளிர் ஐவர் கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற வி.காட்டுப்பாளையம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

கால்பந்து

மாநில அளவில் பள்ளி மாணவிகளுக்கான மகளிர் ஐவர் கால்பந்துப் போட்டிகள் திண்டுக்கல் மற்றும் சென்னை வியாசர்பாடி ஆகிய இடங்களில் நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்கேற்ற வி.காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மகளிரணி முதலிடத்தைப் பெற்று வெற்றி பெற்றது. மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கான பாராட்டு விழா அப்பள்ளியில் நடைபெற்றது.  

பெற்றோர் ஆசிரியர் கழகம் இவ்விழாவை நடத்தியது. இதற்கு அப்பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கடலூர் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் வெற்றி பெற்ற கால்பந்து வீராங்கனைகள் ரம்யாகிருஷ்ணன், பிரியதர்ஷிணி, கனகலட்சுமி, சரிதா, ஹபீதா, பிரபாவதி, ரதிமீனா, வினோதினி மற்றும் பயிற்சியாளர் உடற்கல்வி ஆசிரியர் மகேஷ்குமார் ஆகியோரை பாராட்டி சான்றிதழ்கள் பரிசு கோப்பைகளை வழங்கினார். மேலும், தேசிய அளவில் சாதனை படைக்க வேண்டுமெனவும் வாழ்த்தினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் காசிலிங்கம், ஜெயக்கொடி உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், மாணவர் மாணவிகள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.