வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (29/06/2018)

கடைசி தொடர்பு:00:30 (29/06/2018)

`நீட் விலக்கு கோரிய சட்ட மசோதா என்ன ஆனது?’ - பேரவையில் ஸ்டாலின் கேள்வி!

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதாவின் நிலை குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய மானியக் கோரிக்கையின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நீட் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அப்போது பேசிய ஸ்டாலின் `மாநிலக் கல்வி உரிமைகளை மதிக்காமல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு மாணவ, மாணவிகளை மட்டுமல்லாது பெற்றோரையும் பாதிப்படைய வைத்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவருக்கு அது சென்று சேரவில்லை. அழுத்தம் தர வேண்டும். மசோதாவின் தற்போதைய நிலை என்ன’ என அவர் கேள்வி எழுப்பினார்.

விஜயபாஸ்கர்

இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `நீட் தேர்வு விதிமுறைகளில் பல்வேறு சரத்துகள் தளர்த்தப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கு மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் விண்ணப்பிக்க முடியாது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தமிழகத்தில் விண்ணப்பிக்க முடியும். வேறு மாநிலத்தவர் விண்ணப்பித்தால், அது ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், நீட் மசோதா குறித்து குடியரசுத் தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.